வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 19 ஏப்ரல் 2015 (21:33 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் அபார வெற்றி!

இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 

 
வாட்சன் -ரஹானே  ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 144 ரன்களை சேர்த்து புதிய சாதனையை படைத்தது.
 
ஐபிஎல் போட்டியில் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. நடப்புத் தொடரில் இதுவரை இந்த இரு அணிகளும் தோல்வியை சந்திக்கவில்லை என்பதால் இந்த ஆட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்தை தேர்வு செய்தது.
 
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக மெக்கல்லமும் ஸ்மித்தும் களமிறங்கினர். சென்னை அணி 15 ரன்களை எட்டிய போது முதல் விக்கெட்டை இழந்தது. 7 பந்துகளை சந்தித்து 12 ரன்களை எடுத்திருந்த மெக்கல்லம் விக்கெட்டை  பறிகொடுத்தார். மெக்கல்லம் வெளியேறியதை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அதேவேளையில் ஸ்மித் அதிரடியை தொடர்ந்து இதனால் சென்னை அணி முதல் 5 ஓவர்களில் 36 ரன்களை எடுத்தது.
 
சுரேஷ் ரெய்னா 7 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சென்னை அணி 38 ரன்களை எட்டுவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் டுப்லெசிஸ் களமிறங்கினார்.
 
டுப்லெசிஸ் நிலைக்கவும் இல்லை; அடிக்கவும் இல்லை. தன் பங்ககுக்கு ஒரு ரன் எடுத்த நிலையில் நடையை கட்டினார். சென்னை அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கேப்டன் தோனி களமிறங்கினார். அதேவேளையில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சும் பீல்டிங்கும் அபாரமாக இருந்ததை கண்டிப்பாக இங்கு குறிப்பிட வேண்டும்.
 
மேலும் அடுத்த பக்கம்..

தவித்துக்கொண்டிருந்த சென்னை அணிக்கு ஸ்மித் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். ஆனால் அவரும் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகி வெளியேறினார். சென்னை அணி 65 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சென்னை அணி 10 ஓவர்களில் 68 ரன்களை எடுத்திருந்தது. தோனியும் பிராவோவும் களத்தில் இருந்தனர்.
 
பின்னர் பிராவோ - தோனி ஜோடி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக பிராவோ அபாரமாக விளையாடி 36 பந்துகளில் 62 ரன்களை அடித்தார். தோனி தன் பங்குக்கு 31 ரன்களை எடுத்தார். 20 ஓவர்களில் முடிவில் சென்னை அணி 156 ரன்களை எடுத்தது.
 
வாட்சன் 35 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உதவியுடன் அரைசதமடித்தார். அதேவேளையில் ரஹானேவும் அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இந்த இரு விக்கெட்டுகளையும் பிரிக்க சென்னை பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட அனைத்து உக்திகளும் வீணாகின.
 
பின்னர் ரஹானேவும் 35 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். 12வது ஓவரில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. இந்த ஜோடி 15 ஓவர்களில் 138 ரன்களை குவித்த போது ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற புதிய சாதனையை படைத்தது. இதற்கு முன் கடந்த 2009ஆம் ஆண்டு டர்பனில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக இதே அணியை சேர்ந்த கிரீம் ஸ்மித் - ஓஜா ஜோடி 135 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. வாட்சன் -ரஹானே  ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 144 ரன்களை சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக புதிய  சாதனையை உருவாக்கியது.
 
ராஜஸ்தான் அணி 144 ரன்கள் எடுத்திருந்த போது வாட்சன் 73 ரன்களில் ஜடேஜா பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து ஸ்மித் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரஹானே 76 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
 
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். ராஜஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.