வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (07:32 IST)

மீண்டும் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி: முதல் வெற்றியைப் பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
 

 
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 16வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளிலும் தலா 4 மாற்றம் செய்யப்பட்டிருந்தன.
 
டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி, இரவில் பனியின் தாக்கம் இருக்கக்கூடும் என்று கருதி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை வீரர்கள் அமர்க்களப்படுத்தினர். பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகவும் அமைந்தது.
 
பார்த்தீவ் பட்டேல் (12 ரன்) சீக்கிரம் நடையை கட்டினாலும், லென்டில் சிமோன்சும், உன்முக் சந்தும் பின்னியெடுத்தனர். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 11.5 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தாண்டியது.
 
மேலும் அடுத்த பக்கம்...

சிமோன்ஸ் 59 ரன்களில் (44 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் அவுட் ஆனார். அடுத்து வந்த ரோகித் சர்மாவும் ரன் மழை பொழிந்தார். டேவிட் வைசின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசிய உன்முக் சந்த் அந்த ஓவரில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். அபுநெசிமை பதம் பார்த்த ரோகித் சர்மா, அவரது ஓவரில் 3 சிக்சர்களை பறக்க விட்டு பிரமாதப்படுத்தினார். இதனால் ஸ்கோர் 200 ரன்களை நோக்கி பயணித்தது.
 

 
உன்முக் சந்த் 58 ரன்களும் (37 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் சர்மா 42 ரன்களும் (15 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். பொல்லார்ட் (5 ரன்), அம்பத்தி ராயுடு (0) சோபிக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. இதில் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 76 ரன்கள் சேர்த்தனர்.
 
எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கியதற்கு இடையே வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வைஸ் ஒரே ஓவரில் (19வது ஓவர்) 3 விக்கெட் வீழ்த்தியது மட்டுமே பெங்களூருக்கு ஆறுதலான விஷயம். அவர் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில் கிறிஸ் கெய்ல் (10 ரன், 24 பந்து), கேப்டன் விராட் கோலி (18 ரன், 18 பந்து) சோடை போனார்கள். ஆனாலும் மிடில் வரிசையில் டிவில்லியர்ஸ் 11 பந்தில் 41 ரன்கள் (5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் விளாசிய ஒரு சிக்சர் 108 மீட்டர் தூரத்திற்கு ஓடியது. இந்த ஐபிஎல் தொடரில் மெகா சிக்சர் இது தான். இறுதி கட்டத்தில் டேவிட் வைஸ் (47 ரன், 25 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) போராடிய போதிலும் அது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.
 
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. தனது 100வது ஐபிஎல் ஆட்டத்தில் ஆடிய மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தங்களது முதல் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோல்வியை தழுவிய மும்பை அணிக்கு இதுவே முதலாவது வெற்றியாகும். 3வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூருக்கு இது 2வது தோல்வியாகும்.