வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2015 (15:24 IST)

ஐபிஎல்: தொடர் தோல்வியில் பஞ்சாப்; கொல்கத்தாவிடமும் பணிந்தது

ஐபிஎல் கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பஞ்சாப் அணி கொல்கத்தாவிடமும் பணிந்தது.
 

 
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு புனேயில் நடந்த 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. கொல்கத்தா அணியில் தாயகம் திரும்பிய ஷகிப் அல்–ஹசனுக்கு பதிலாக ரையான் டென்டஸ்சாட் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் ரிஷி தவான், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு, திசரா பெரேரா, குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டனர்.
 
இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்கம் சொதப்பியது. முரளி விஜய் 4வது பந்திலேயே டக்–அவுட் ஆகி நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரர் ஷேவாக்குக்கு இது 100வது ஐபிஎல் ஆட்டமாகும். இந்த இலக்கை எட்டிய 10வது வீரர் என்ற பெருமையுடன் களம் இறங்கிய ஷேவாக் (11 ரன்) ரசிகர்களை ஏமாற்றி விட்டார். விருத்திமான் சஹாவும் (15 ரன்) நிலைக்கவில்லை.
 
இதைத் தொடர்ந்து மிடில் வரிசையில் மேக்ஸ்வெல்லும், கேப்டன் ஜார்ஜ் பெய்லியும் கைகொடுத்ததால் பஞ்சாப் அணி ஓரளவு கவுரவமான ஸ்கோரை நெருங்கியது. 13 ரன்னில் இருந்த போது எளிதான கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த மேக்ஸ்வெல் 33 ரன்களில் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி தனது பங்குக்கு 60 ரன்கள் (45 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) திரட்டினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.
 
கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல், ரஸ்செல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
 
தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா அணி, சந்தீப் ஷர்மாவின் வேகப்பந்து வீச்சில் திணறியது. 60 ரன்னுக்குள் (7.5 ஓவர்) உத்தப்பா (13 ரன்), கேப்டன் கம்பீர் (11 ரன்) உள்பட 5 முன்னணி தலைகள் உருண்டன. இதில் சந்தீப் ஷர்மா மட்டும் 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார்.
 
இந்த நெருக்கடியான சூழலில் ஆந்த்ரே ரஸ்செல்லும், யூசுப் பதானும் இணைந்து கொல்கத்தா அணிக்கு புத்துயிர் ஊட்டினர். குறிப்பாக ரஸ்செல், பஞ்சாப் பவுலர்களை பஞ்சராக்கி தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினார். ரஸ்செல் 66 ரன்களில் (36 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். அடுத்து ஆட வந்த பியுஷ் சாவ்லா பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார்.
 
கொல்கத்தா அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யூசுப்பதான் (28 ரன், 24 பந்து, 4 பவுண்டரி), சாவ்லா (4 ரன்) களத்தில் நின்றனர்.
 
3வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 2வது வெற்றியாகும். அதே சமயம் 4வது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப்புக்கு இது 3வது தோல்வியாகும். பஞ்சாப் அணி ஏற்கனவே ராஜஸ்தான், டெல்லி அணிகளிடமும் தோல்வி கண்டிருந்தது.