செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2016 (13:39 IST)

இந்தியா ’ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? இலங்கையுடன் இன்று பலபரீட்சை

இன்று நடைபெறவுள்ள ஆசியக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன.
 

 
5 நாடுகள் பங்கேற்றும் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி முதலில் ஆடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
 
வங்கதேசதுடனான முதல் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான் உடனான இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
 
இன்று நடைபெறும் 3வது போட்டியில், இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் இலங்கையை வீழ்த்தி இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இலங்கையை தோற்கடித்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துவிடும். பந்துவீச்சில் ஜாஸ்பிரிட் பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தாக்குதல் தொடுக்க காத்திருக்கின்றனர்.
 
ரன் குவிப்பில், விராட் கோலி, ஹர்த்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ், தோனி என பெரிய பட்டாளமே உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காலில் காயமடைந்த தொடக்க வீரர் ரோகித்சர்மா இலங்கையுடன் ஆடுவாரா? என்பது சந்தேகமே.
 
மலிங்கா தலைமையிலான இலங்கை அணி வலுவான அணியாக உள்ளது. பேட்டிங்கில் அனுபவ வீரர் தில்ஷன், சண்டிமால், மேத்யூஸ், திசரே பெரேரா ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் மிரட்ட யாக்கர் மன்னன் மலிங்கா, ரங்கணா ஹெராத், குலசேகரா ஆகியோர் உள்ளனர்.
 
இலங்கை அணி வங்கதேசத்துடன் தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. எனவே, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்யமுடியும்.
 
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.