வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 29 அக்டோபர் 2016 (19:59 IST)

190 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நான்கு ஒருநாள் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தன.
 
இந்நிலையில், 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.
 
முதல் 4 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 53 ரன்கள் மட்டுமே குவித்திருந்த ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு 70 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக விராட் கோலி 65 ரன்கள் குவித்தார்.
 
பின்னர் 270 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் டக் அவுட் ஆகி வெளியேற அணியின் வீழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து டாம் லாதம் 19, கேன் வில்லியம்சன் 27 ரன்களிலும், ராஸ் டெய்லர் 19 ரன்களிலும் வெளியேறினர்.
 
63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த நியூசிலாந்து அணி மேற்கொண்டு 16 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள 7 விக்கெட்டுகளை இழந்ததுதான் கொடுமையான விஷயம். அதில் 4 வீரர்கள் டக் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா தரப்பில் அமித் மிஸ்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது ஆகிய இரண்டையும் அமித் மிஸ்ரா பெற்றார்.