வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (18:58 IST)

2 ஆவது ஒரு நாள் போட்டி: 133 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில் நடைபெற்ற 2 ஆவது ஒரு நாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி, இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் குக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனால் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். வழக்கம் போல் தவானின் ஆட்டம்  சொதப்பியது. அவர் 11 ரன்னில் கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார்.

பின் வந்த கோலி டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதனால் முதல் 10 ஓவர்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்நிலையில் 3 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மாவும், ரஹானேவும் அணியை சரிவில் இருந்து சற்று மீட்டனர். பின் இந்திய அணியின் ஸ்கோர் 110 ரன்களில் இருந்த போது ரஹானே 41 ரன்களில் வெளியேறினார்.

பின் சிக்சர் அடிக்க முயற்சித்த ரோகித் ஷர்மாவும் ஆட்டம் இழந்து நடையை கட்ட, மறுபடியும் இந்திய அணி திணறியது.

இந்நிலையில் ரெய்னாவும், கேப்டன் டோனியும் இணைந்தது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது. பின் இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு முனையில் ரெய்னா சிக்சர்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்-பிளேயில் இந்திய வீரர்கள் 62 ரன்களை சேர்த்தனர்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சதத்தை பதிவு செய்தார் ரெய்னா. பின் உடனே கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார் ரெய்னா. டோனி-ரெய்னா கூட்டணி 5 ஆவது விக்கெட்டுக்கு 144 ரன்களை சேகரித்தனர்.

இதே வேகத்தில் தனது 55 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார் கேப்டன் தோனி. பின் தோனியும் 52 ரன்களில் கிளீன் போல்டானார். கடைசி ஓவரில் அஸ்வின் 2 பவுண்டரி அடிக்க இறுதியில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.

இறுதியாக 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் மழை குறிக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டத்தில் அரைமணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. பின் இங்கிலாந்து அணிக்கு 47 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது.

இதனால் இங்கிலாந்து அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு, முதல் பதிலடியை கொடுத்தது இந்திய அணி.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அலெக்ஸ் ஹாலஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்டு, அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்

இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.