கடைசி நேரத்தில் கோட்டை விட்ட இந்தியா: தவான், கோஹ்லி அதிரடி வீண்!


Caston| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (16:47 IST)
ஆஸ்திரேலியா இந்தியா இடையே கான்பெராவில் நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோஹ்லி, தவான் அதிரடி ஆட்டம் வீணானது.

 
 
ஷிகர் தவான் 126 ரன்னும், விராட் கோஹ்லியும் 106 ரன்னும் குவித்து அதிரடியாக ஆடி இந்திய அணியை 349 என்ற இமாலய இலக்கை நோக்கி பயணிக்க உதவினர். ஆனால் இவர்களின் இந்த அபார ஆட்டத்தை பின்னர் வந்த இந்திய வீரர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர்.
 
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டை இழந்து 348 ரன் சேர்த்தது. அந்த அணியில் ஆரோன் ஃபின்ச் 107 ரன்னும் வார்னர் 93 ரன்னும் குவித்தனர்.
 
கடைசி நேரத்தில் ஸ்மித் அதிரடியாக 29 பந்துகளில் 51 ரன்னும் மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 41 ரன்னும் சேர்த்து அணிக்கு பலம் சேர்த்தனர். இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
பின்னர் 349 ரன் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பயணித்த இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 25 பந்துகளில் 41 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களம் கண்ட விராட் கோஹ்லி தவானுடன் இணைந்து அருமையாக விளையாடினார்.
 
65 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி 277 ரன்னுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 113 பந்துகளில் 126 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறக்கிய இந்திய அணி கேப்டன் தோனி 3 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
 
அதனை தொடர்ந்து 92 பந்துகளில் 106 ரன் எடுத்த விராட் கோஹ்லியும் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சற்று குறைய தொடங்கியது. தொடர்ந்து குகீரட் சிங், ரஹானே ஆட்டமிழக்க இந்திய அணி தனது பொறுப்பில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியாக இந்திய அணி 49.2 ஓவரில் 323 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
ரோகித், தவான், கோஹ்லி தவிர அனைத்து இந்திய வீரர்களும் சர்வதேச போட்டிக்கு தகுதி இல்லாத வீரர்கள் போல தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். 277 ரன்னுக்கு 2-வது விக்கெட்டை இழந்த இந்திய அணி 323 ரன்னில் 10 விக்கெட்டை இழந்தது. கூடுதலாக 46 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்தது.


இதில் மேலும் படிக்கவும் :