செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (19:23 IST)

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மரண அடி: 11 ரன்னில் 7 விக்கெட்டை இழந்த சோகம்!

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மரண அடி: 11 ரன்னில் 7 விக்கெட்டை இழந்த சோகம்!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. இதன் இரண்டாவது நாள் ஆட்டம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்தது என்றால் அதை மறுக்க முடியாது.


 
 
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 256 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 4 ரன்களை எடுத்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் குவித்தது.
 
இதனால் இந்திய ரசிகர்கள் ஆனந்த களிப்பில் துள்ளி குதித்தனர். பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை 260 ரன்களில் டெஸ்ட் போட்டியில் ஆல் அவுட் செய்து விட்டோமே என பெருமிதப்பட்டனர். ஆனால் அந்த பெருமிதம் இந்திய அணி பேட்டிங் செய்தபோது நிலைத்து நிற்கவில்லை.
 
சொந்த மண்ணில் அசுர பலத்துடன் இருந்த இந்திய அணி இப்படி சோடை போகும் என யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். 26 ரன் எடுத்திருந்த போது 10 ரன்களுடன் நடையை கட்டினார் முரளி விஜய். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் மட்டுமே ஆறுதல் அளிக்கும் விதமாக 64 ரன்கள் எடுத்தார்.
 
முரளி விஜய்க்கு பின்னர் களமிறங்கிய புஜாரா 6 ரன்னில் ஆட்டமிழக்க கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் 44 ரன்னில் இந்தியா 3 விக்கெட்டை இழந்து தடுமாறுகிறது எப்படி இதில் இருந்து மீளும் என்று. அணியை மீட்க ராகுல் உடன் கை கோர்த்த ரகானேவால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
 
13 ரன்னில் ரகானே வெளியேறும் போது அணியின் எண்ணிக்கை 94 ரன்களில் 4 விக்கெட்டை இழந்திருந்தது. தொடர்ந்து களம் இறங்கிய யாரும் நிற்கவில்லை, சீட்டுக்கட்டை போல சரிந்தது இந்திய அணியின் விக்கெட். 7 மாடி கட்டிடம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டால் ஒரே நொடியில் எப்படி சரிந்து விழுமோ அப்படி விழுந்தது இந்திய அணியின் விக்கெட் சரிவு. ரகானே விக்கெட்டுக்கு பின்னர் வந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்னுடன் நடையை கட்டினர்.
 
கடைசி 11 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட்டை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இறுதியில் 105 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்தியா. கே.எல்.ராகுல் இல்லையென்றால் இந்திய அணி 41 ரன்னில் சுருண்டியிருக்கும். ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீஃபெ இந்திய மிடில் மற்றும் இறுதி ஆட்டக்காரர்களை வீழ்த்தி 6 விக்கெட்டை வீழ்த்தினார்.
 
சொந்த மண்ணில் இந்திய அணி இதுவரை வாங்காத மரண அடியை இன்று ஆஸ்திரேலியாவிடம் வாங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டையும் சேர்த்து இன்று மட்டும் புனே டெஸ்டில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 143 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து மொத்தம் 298 ரன்கள் முன்னிலை பெற்று பலமாக உள்ளது.