1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 12 அக்டோபர் 2014 (07:53 IST)

2 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி: 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
 
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி, 3 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கு பெறவுள்ளது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
 
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2 ஆவது ஒரு நாள் போட்டி டெல்லியில் அக், 11 நேற்று நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானேவும், ஷிகார் தவானும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர்.
இதில் தவான் ஒரு ரன்னில் கிளீன் போல்டு ஆனார். மேலும் ரஹானேவும் 12 ரன்னில் வெளியேறினார். அம்பத்தி ராயுடு 32 ரன்கள் எடுத்தார்.
 
பின் இணைந்த கோலியும், ரெய்னாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு முதல் முறையாக அரைசதம் அடித்தார், கோலி. இது அவரது 31 ஆவது அரைசதமாகும். ரெய்னாவும், தோனியும் தன் பங்கிற்கு அரைசதத்தை எட்டினார்.
 
இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராவோ 8 பவுலர்களை உபயோகப்படுத்தியுள்ளார். இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. சதத்தை நெருங்கிய சுமித் 97 ரன் எடுத்திருந்த போது ஷமியின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். இதுவே இந்திய அணிக்கு திருப்புமுனையாய் அமைந்தது.
 
பின் வந்த பேட்ஸ்மேன்கள், பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 46.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
இதன்மூலம், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமனும் செய்தது.