வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 28 பிப்ரவரி 2015 (18:04 IST)

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை சுருட்டிய இந்தியா; 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
 
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21ஆவது லீக் ஆட்டம் பெர்த்தில் நடைபெற்றது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 
அதன்படி முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அம்ஜத் அலி, ஆண்ட்ரி பெரன்கர், கிருஷ்ணா சந்திரன் ஆகிய மூவரும் தலா 4 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
 
பின்னர் களமிறங்கிய குர்ரம் கான் 14 ரன்களில் நடையை கட்டினார். ஸ்வப்னில் பாடில் (7), ரோஹன் முஸ்தபா (2), அம்ஜத் ஜாவட் (2), முகமது நவீத் (6), முகமது தாஹிர் (1) ஆகியோர் வந்த வேகத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

 
அந்த அணியில் அதிகப் பட்சமாக ஷைமன் அன்வர் மட்டும் 35 ரன்கள் எடுத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் மூன்று பேரை தவிர, மற்ற 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 
பின்னர் 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 14 ரன்களில் அவுட்டானார். அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலியும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அனியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
 

 
ரோஹித் சர்மா 55 பந்துகளில் (10 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) 57 ரன்களும், விராட் கோலி 41 பந்துகளில் (5 பவுண்டரிகள்) 33 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.