105 ரன்னுக்கு சுருண்டது இந்திய அணி: ஆஸ்திரேலியா அனல் பறக்கும் பந்துவீச்சு!

105 ரன்னுக்கு சுருண்டது இந்திய அணி: ஆஸ்திரேலியா அனல் பறக்கும் பந்துவீச்சு!


Caston| Last Modified வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (13:34 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. புனேவில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 
 
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களில் ஆட்டமிழந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்களை இழந்து, 256 ரன்களை சேர்த்திருந்தது. 2வது நாள் போட்டி இன்று காலை தொடங்கியது. தொடங்கியவுடன் 260 ரன்களில் ஆஸ்திரலேய அணி, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
 
இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களும் சாய்த்தனர். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ரென்ஷா 68 ரன்னும், ஸ்டார்க் 61 ரன்னும் எடுத்தனர்.
 
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சரிவை சந்திக்க ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து நடையை கட்டினர்.
 
கே.எல்.ராகுலும், ரஹானேவும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி அணியை மீட்க முயன்றனர் ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை. கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
 
முரளி விஜய், கே.எல்.ராகுல், ரகானே தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னுடன் அவுட் ஆனார்கள். இந்திய அணியில் அதிக பட்சமாக கே.எல்.ராகுல் 64 ரன்களும், ரகானே 13 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி 41 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன் எடுத்தது.
 
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் ஓ கீவ் 6 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. 19 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. டேவிட் வர்னரை எல்பிடபுல்யூ முறையில் அஸ்வின் வெளியேற்றி உள்ளார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளதால் ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பது சந்தேகமே.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :