1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 9 பிப்ரவரி 2015 (10:02 IST)

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப் 14 அன்று தொடங்கி மார்ச் 29 வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளது. அதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும். இதில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. 
 
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். வார்னர், ஆரோன் பிஞ்ச் இருவரும் தொடக்கத்திலேயே ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
எனினும் ஆரோன் பிஞ்ச் 20 ரன்னில் அவுட் ஆனார். பின் இணைந்த வாட்சனும் 22 ரன்னில் வெளியேறினார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் இம்முறை 1 ரன்னில் ஏமாற்றினார்.
 
மறுமுனையில் வார்னர் தன் அசத்தல் ஆட்டத்தால் சதம் கண்டார். பின் வார்னரும் 104 ரன் எடுத்த போது போல்டானார்.

பின்னர் இணைந்த மார்ஷ் 21 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்  53 பந்தில்  சதத்தை எட்டினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 48.2 ஓவரில் 371 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர்  372 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தள்ளப்பட்டது. ரோகித் சர்மா - தவான் ஜோடி இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்திலேயே ரோகித் சர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த கோலியும் 18 ரன்களில் வெளியேறினார்.
 
பின் இணைந்த ரகானே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ரகானே 66 ரன்களில் அவுட்டாகினார். மறுமுனையில் தவானும் 59 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். பின் வந்த வீரர்கள் அனைவரும் பெரிதாக சோபிக்காததால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.