1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 13 டிசம்பர் 2014 (14:17 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிச, 9 அன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 
 
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 444 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதனால் 73 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. இதில் இரண்டாவது இன்னிங்ஸிலும் வார்னர் அசத்தலாக சதம் கண்டார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 69 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி 363 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 
 
இன்று இப்போட்டியின் 5 ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய முன்னிலை ரன்களோடு டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. இதனால் இந்திய அணிக்கு 364 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். தவான் 9 ரன்களிளும், புஜாரா 21 ரன்களிளும் ஆட்டமிழந்தனர். 
 
மறுமுனையில் கோலி மற்றும் முரளிவிஜய் சிறப்பாக செயல்பட்டனர். முரளிவிஜய் 99 ரன்கள் எடுத்த போது எதிர்பாராவிதமாக எல்.பி.டபுல்யூ ஆனார். எனினும் கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். பின்னர் ரோகித் சர்மா, சஹா ஆகியோர் அவுட் ஆகி வெளியேற கேப்டன் கோலி மற்றும் போராடிக்கொண்டிருந்தார்.

ஆனாலும் அதிர்ஷ்ட காற்று ஆஸ்திரேலிய அணி பக்கம் திரும்ப கோலியும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற இறுதியில் இந்திய அணி 315 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.