வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Geetha priya
Last Modified: திங்கள், 7 ஏப்ரல் 2014 (17:24 IST)

இந்தியாவின் தோல்விக்கு யுவ்ராஜை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது - யுவ்ராஜின் தந்தை

வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை சுலபமாக வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது. 
 
இந்த டி 20 போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்தியாவிற்கு  மீண்டும் கோப்பையை  வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக  எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிபோட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா, யுவ்ராஜ் சிங்கின் மோசமான பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டதாக செய்திகள் வெளியாகின.   
 
21 பந்துகளை சந்தித்த யுவ்ராஜ்  11 ரன்கள் மட்டும் குவித்தார். இந்தியா கடைசி 4 ஓவர்களில் பவுண்டரிகளே அடிக்க முடியவில்லை. குறிப்பாக 16வது ஓவரிலேயே 70 ரன்களை கடந்த விராட் கோலிக்கு விளையாட கடைசி 5 ஓவர்களில் சில பந்துகளே கிடைத்தன. 
 
இந்நிலையில், இந்தியாவின் தோல்விக்கு யுவ்ராஜ் சிங்கே காரணமென அதிருப்தி அடைந்த ரசிகர்கள் யுவ்ராஜ்  வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதலில்  ஈடுபட்டுள்ளனர். 
 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள யுவ்ராஜின் தந்தை ஜோக்ராஜ், ' இந்தியாவின் தோல்விக்கு யுவ்ராஜை  மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. இந்த தோல்விக்கு இவர் தான் காரணமென அவரை தனிமைப்படுத்தி கூறிவிடமுடியாது. 
 
நாம் தோற்கும்போது அனைத்து பக்கங்களிலும் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்ற தாழ்வுகள் வாழ்வில் ஒரு அங்கமாகும், இது இந்த விளையாட்டிற்கும் பொருந்தும்' எனத் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டுவர்ட் பிராட் பந்துவீச்சில்  யுவ்ராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.