வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (16:25 IST)

வீரர்களை ஒற்றுமைப்படுத்த தோனி கையாண்ட வித்தியாசமான அணுகுமுறை

உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன், தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இந்திய அணி வீரர்களுக்குள் ஒற்றுமை குலைந்து போய் இருந்ததாக கூறப்பட்டது. அணி வீரர்களுக்குள் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த தோனி கையாண்ட வித்தியாசமான அணுகுமுறையே களத்திலும் இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளது.
உலகக்கோப்பை போட்டியில் பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று பொழுதை கழித்து விட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். அப்போது அடிலெய்டில் இருந்த இந்திய அணி வீரர்களில் கேப்டன் தோனி, பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, மோகித் சர்மா ஆகியோருடன் அருகில் இருந்த பொழுது போக்கு சுற்றுலாத் தலத்திற்கு சென்றார்.
 
தன்னுடன் வந்த 3 வீரர்களுக்கும் தோனி அன்பு கலந்த அறிவுரைகளை வழங்கி, அவர்கள் விரும்பிய உணவு வகைகளை ஆர்டர் செய்து, தனது கையாலேயே பரிமாறி அவர்களை மனதளவில் தயார் படுத்தியுள்ளார். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக, அடிலெய்டில் உள்ள புகழ்பெற்ற ரெஸ்டாரன்ட் ஒன்றில் சுரேஷ் ரெய்னா, இளம் பந்துவீச்சாளர் அக் ஷார் படேலுக்கும் தோனி விருந்தளித்தார். கேப்டனின் ஆதரவு, அவர் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை இளம் வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து களத்திலும் நம்பிக்கையுடன் செயல்பட வைத்துள்ளது.
 
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாகவும் இதே மந்திரத்தை தோனி கையில் எடுத்துள்ளார். இந்த முறை ஆல்ரவுண்டர் ரவீந்தர் ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு மெல்பர்ன் நகரில் உள்ள மெக்சிகோ உணவகத்தில் விருந்தளித்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். தற்போது பெர்த்தில் யு.ஏ.இ. அணிக்கு எதிரான ஆட்டத்திற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் துணை கேப்டன் விராட்கோலி, பந்துவீச்சாளர் முகமது சமியுடன் ஹோட்டலுக்கு கிளம்பிய கேப்டன் தோனி,  'கிரில் சிக்கன்' விருந்தளித்தாராம்.
 
கேப்டன் தோனியின் அன்பு கலந்த விருந்து மந்திரம் வீரர்களிடையே நன்றாக வேலை செய்யத் தொடங்கியுள்ளதாம். விருந்து சமயங்களில் கேப்டன் என்ற முறையில் தோனியிடம் தங்களுக்குள்ள பிரச்சனைகளை இளம் வீரர்கள் மனம் விட்டு பேசுகின்றனராம். இதனால் மனதில் உள்ள பாரங்கள் குறைந்து அவர்களை நிம்மதியாக பயிற்சியில் ஈடுபட வைக்கிறதாம்.
 
தோனியின் இந்த மந்திரம்தான் இந்திய வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி,  இரு இமாலய வெற்றிக்கு வித்திட்டதாம். இதுபோல தொடர்ந்து அணி வீரர்களுக்கு தனித்தனியாக விருந்தளித்து உற்சாகப்படுத்த தோனி திட்டமிட்டுள்ளாராம்.