செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (17:14 IST)

”இந்திய ரசிகர்கள் இப்படி செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை” - டு பிளஸ்ஸி

இந்திய ரசிகர்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை என்று தென் ஆப்பிரிக்க அணியின் டி 20 கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி கூறியுள்ளார்.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கை அணி கைப்பற்றியது.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகையில் ரசிகர்கள் பாட்டில்களை வீசி கலாட்டா செய்தனர்.
 
போட்டி முடித்து செய்தியாளர்களிடம் பேசிய டு பிளஸ்ஸி, “நான் பார்த்த வரையிலும் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இதனைத்தான் மிகச்சிறந்த பந்து வீச்சாக கருதுகிறேன். அனைத்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து விசியதை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.
 
இந்தியாவை 2-0 என்ற கணக்கில் வென்று இருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். உண்மையிலேயே டி 20 போட்டிகளில் இது எங்களுக்கு முக்கியமானதாக கருதுகிறோம்.
 
முதல் ஆறு ஓவர்கள் நாங்கள் வித்தியாசமாக பந்து வீசினோம். சுழற்பந்தையும், வேகப்பந்து வீச்சையும் மாறி மாறி வீசியதால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது. இரண்டு வீரர்களை ரன் அவுட் செய்ததும் முக்கியமானது.
 
நான் 5 - 6 ஆண்டுகளாக இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இது போன்ற ஒரு சம்பவத்தை இதுவரை கண்டதில்லை. இங்கே போட்டிக்காகத்தான் வந்துள்ளோம். சிறந்த அணி வெற்றி பெறுகிறது.
 
இன்னும் 5 ஒருநாள் போட்டிகள் உள்ளன. இது போன்ற இன்னொரு சம்பவத்தை நான் பார்க்க விரும்பவில்லை. இந்த சுற்றுப்பயணத்தில் இதுதான் முதலும் கடைசியுமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.