வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:40 IST)

மீண்டும் அணிக்கு திரும்பும் கவுதம் கம்பீர் - உபயம் கங்குலி?

தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் 2 வருடங்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
 

 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 
2ஆவது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை [30-09-15] அன்று, கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக கவுதம் கம்பீர் இறங்க உள்ளார்.
 
கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கவுதம் கம்பீர் 2 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசியாக 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார்.
 
மேலும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதே போல் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஹரியாணாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
கங்குலி காரணமா?:
 
34 வயதான காம்பீர், சேவக்குடன் தொடக்க ஜோடியாக இணைந்து  4,412 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜோடி, இந்திய அணியின் சிறந்த தொடக்க ஜோடியாக கருதப்பட்டது. இதுவரை, 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 9 சதங்கள், 21 அரைச் சதங்கள் உட்பட 4,046 ரன்கள் [சராசரி 44.18] சேர்த்துள்ளார்.
 
சவுரவ் கங்குலி அணித் தலைவராக இருந்தபோது கவுதம் கங்பீர் அணியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், தோனிக்கும் கம்பீருக்கும் இருந்த மவுன யுத்தத்தை அடுத்து, தோனி அவரை ஓரம் கட்டினார். தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் வந்தார்.
 
இந்நிலையில், தற்போதைய பிசிசிஐ தேர்வுக்குழுவில் ’தாதா’ கங்குலி இடம்பெற்றதை அடுத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.