1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (13:55 IST)

வங்காள கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவரானார் சவுரவ் கங்குலி

மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார்.
 

 
கடந்த 20ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்த ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
 
இதனையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பதவியையும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியையும் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதற்கிடையில், நேற்று முன்தினம் சவுரவ் கங்குலி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது டால்மியாவின் மகன் அபிஷேக் டால்மியாவும் உடனிருந்தார்.
 
இந்நிலையில், சவுரவ் கங்குலியை மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
 
இதனையடுத்து அடுத்த 14 மாதங்களுக்கு மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி இருப்பார்.
 
இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் டால்மியாவின் பணியை ஒருவர் முன்னெடுத்து செல்வது அவசியம். இதற்கு சவுரவ் கங்குலி சரியான நபராக இருப்பார் என உணர்கிறேன்.
 
சவுரவ் கங்குலி தேர்வு விஷயத்தில் எனது தலையீடோ, அரசின் தலையீடோ எதுவும் கிடையாது. இது பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் முடிவு” என்றார்.
 
இது குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், ”நான் அடுத்த 14 மாதங்களுக்கு மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக பணியாற்ற உள்ளேன். ஒவ்வொன்றுமே சவாலான விஷயம்தான்.
 
நாங்கள் 121 கிரிக்கெட் சங்க உறுப்பினர்களிடத்தில் பேசி கிரிக்கெட் வாரியத்தை முன்னெடுத்து செல்வதற்கான வழியை ஆரய்ந்து முடிவெடுப்போம். என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை நிச்சயம் செய்வேன்” என்றார்.