1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 4 ஜூலை 2015 (19:38 IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஃபால்க்னர் கைது

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுரண்டராக வலம் வருபவர் ஜேம்ஸ் ஃபால்க்னர். இவர் இதுவரை 44 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 814 ரன்களும் [1 சதம், 4 அரைச்சதம்], 60 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியிலும், 11 டி-20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

 
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி இரவு இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் மது அருந்திவிட்டு காரில் சென்றுள்ளார். அப்போது, சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் துறையினர் ஃபால்க்னரை சோதனை செய்தனர். அப்போது அளவை தாண்டி மது குடித்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் வரும் செப்.3ம் தேதி துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.
 
இது குறித்து ஜேம்ஸ் ஃபால்க்னர் கூறுகையில், “என்னுடைய நடத்தைக்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் வண்டியை ஓட்டுவது என முடிவெடுத்தது தவறானதாகும். நான் எந்தவிதமான ஆட்சேபனையும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் என்னவிதமான அபராதம் விதித்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார்.