1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (18:56 IST)

தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி - பத்திரிக்கையிடம் ரூ. 100 கோடி முறையீடு

தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி - பத்திரிக்கையிடம் ரூ. 100 கோடி முறையீடு

இந்திய அணி கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட ஹிந்தி நாளிதழ் மீது ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 

 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் சுனில் தேவை, ரகசியமான (ஸ்டிங் ஆபரேஷன்) முறையில் ஹிந்தி நாளிதழ் ஒன்று பேட்டி கண்டது.
 
அப்போது அவர் அளித்த பேட்டியில், 2014-ல் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, ”மழையால் ஆடுகளத்தின் தன்மை மாறியதால், முதலில் பந்துவீச இந்திய அணியின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
ஆனால் டாஸ் வென்ற தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசனிடம் கூறினேன். அவர் முன்னால் தட்டச்சு செய்து புகார் அளிக்கும்படி கூறினார். இதை வெளியே கூறினால் என் உயிருக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் சொல்லவில்லை” என்று அவர் கூறியிருந்தததாக ஹிந்தி நாளிதழில் செய்தி வெளியானது.
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுனில் தேவ், “இவை அனைத்துமே அபத்தமானது. இந்த செய்தியை வெளியிட்ட ஹிந்தி நாளிதழ் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன். இது போன்ற மோசமான கருத்துக்களை யார் பரப்பினாலும், சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
 
தற்போது அந்த ஹிந்தி நாளிதழுக்கு தோனி விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ”இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. எனது புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ள இந்த செய்திக்கு, 48 மணி நேரத்துக்குள் மறுப்பு வெளியிடவேண்டும். இல்லையென்றால் ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.