வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 மார்ச் 2015 (16:43 IST)

உலகக்கோப்பை: தோனி அரைச்சதம் - இந்திய அணி ஊசலாட்டம்

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் கேப்டன் தோனி அரைச்சதம் அடித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

 
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித 89 பந்துகளில் [10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] சதம் விளாசினார். கடைசியாக இறங்கிய மிட்செல் ஜான்சன் தான் சந்தித்த முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு ஓடவிட்டார்.
 
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. ஜான்சன் 9 பந்துகளில் 27 எடுத்தார். ஹாடின் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
பிறகு களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஷிகர் தவான் 41 பந்துகளில் [6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 45 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 13 பந்துகளை சந்தித்து 1 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
அடுத்து ரோஹித் சர்மா 34 ரன்களில் வெளியேறினார். சுரேஷ் ரெய்னாவும் 7 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய ரஹானேவும், தோனியும் அணியை வீழ்ச்சியிலிருந்து தடுத்தனர். இருவரும் இணைந்து 70 ரன்கள் எடுத்தனர்.
 
இந்நிலையில் ரஹானே 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜாவும் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். நிலைத்து நின்று ஆடிய தோனி 55 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 50 ரன்கள் எடுத்தார்.