1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2016 (12:28 IST)

ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது டெல்லி அணி; கிறிஸ் மோரிஸ் அதிரடி வீண்

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர் டேவில்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
 

 
நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் லீக் போட்டியில், நேற்று டெல்லி டேர் டேவில்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக பிரண்டன் மெக்கல்லம் 36 பந்துகளில் [6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 60 ரன்களும், வெய்ன் ஸ்மித் 30 பந்துகளில் [5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 53 ரன்களும் எடுத்தனர்.
 
டெல்லி அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் 171 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
முதல் 10 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். அவர் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்தார்.
 
கடைசி ஓவரில் வெற்றிபெற 14 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் 12 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதிவரைப் போராடிய கிறிஸ் மோரிஸ் 32 பந்துகளில் [4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்] 82 ரன்கள் எடுத்தார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...