1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (11:57 IST)

வேஸ்ட்டான டெல்லி; சென்னையின் அபார பீல்டிங் மற்றும் வெற்றி!

அபுதாபியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல். கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
93 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வேஸ்ட் ஆனது. சென்னை 177/7 என்று ரன்களை எடுக்க டெல்லி அணி 84 ரன்களுக்கு அவுட் ஆனது.
 
முதலில் பேட் செய்த சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா அதிரடி அரை சதம் அடிக்க கடைசியில் தோனி அன்ட் கோ பிக் ஹிட்டிங்கில் இறங்க 177 ரன்களை எடுத்தது சென்னை.
 
பிறகு டெல்லி அணியை பென் ஹில்ஃபென்ஹாஸ், ஈஷ்வர் பாண்டே, மோகித் சர்மா கூட்டணி தங்களது எதிர்பாராத ஸ்விங்கினால் டெல்லி அணியை காலி செய்தனர்.
 
ரெய்னாவும், டுபிளேசியும் ஃபீல்டிங்கில் தூள் கிளப்பினர். பிரமாதமான கேட்ச்களை பிடித்தனர். டெல்லி அணி போராடவே இல்லை 16வது ஓவரில் சென்னை மிகப்பெரிய வெற்றியை ஈட்டிவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 34 ரன்னிற்கு ஒரு விக்கெட் என்று தடுமாறியது. பிறகு 10 ஓவர்களில் 65/1 என்று இருந்தது. ஆனால் கடைசியில் தோனி, டுபிளேசி, மிதுன் மன்காஸ் ஆகியோரின் பிக் ஹிட்டிங்கினால் கடைசி 4 ஓவர்களில் 58 ரன்கள் விளாசப்பட்டது.
டெல்லி அணி துவக்க ஓவரை டுமினியை வைத்து துவங்கியது. உண்மையில் மடத்தனம். வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆட்டக்களத்தில் டுமினியை வைத்து துவங்கியதை கார்த்திக் எப்படி நியாயப்படுத்த முடியும் மேலும் டுமினி பந்தை மெக்கல்லம் அடிக்க அதனை பீல்டிங் செய்யும் முயற்சியில் ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் கூல்டர்-நைல் காயமடைந்து பெவிலியன் சென்றார்.

ஜெய்தேவ் உனட்கட், மொகமட் ஷமியை வைத்து கார்த்திக் ஓட்டினாலும் நடு ஓவர்களில் தோனி 15 பந்துகளில் 32 ரன்களை விளாசித் தள்ளினார். ஒரு பந்து உனட்கட் நெற்றியை பதம் பார்த்திருக்கும், தோனி அடித்த தர்ம அடி நேராக பவுலர் உனட்கட்டின் நெற்றியை நோக்கி வந்தது எப்படியோ தப்பித்து விட்டார்.
டெல்லி அணி சென்னை பீல்டிங் மற்றும் ஈஷ்வர் பாண்டே, பெந்கில்பென் ஹாஸ் பந்துவீச்சினால் சுருண்டது. முதலில் மயன்க் அகர்வாலுக்கு அருமையான கேட்சை எடுத்தார் ரெய்னா, பிறகு விஜய், மற்றும் மனோஜ் திவாரி ஆகியோரது கேட்ச்களை டுபிளேசி மிக மிக அருமையாக பிடித்தார். டும்னியை வைன் ஸ்மித் எல்பி செய்ய ராஸ் டெய்லரை ஹில்ஃபென் ஹாஸ் தனது அருமையான அவுட் ஸ்விங்கரால் எட்ஜைப் பிடித்தார்.
 
தினேஷ் கார்த்திக் அஷ்வின் பந்தில் மிடில் ஸ்டம்பை இழந்தார். ரவீந்தர் ஜடேஜாவும் விக்கெட் கைப்பற்ற டெல்லி டேர் டெவில்ஸ் கதை முடிந்தது. 56 ரன்களை எடுத்து ஐபிஎல்-கிரிக்கெட்டில் 20வது அரைசதம் கண்ட ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாபும், ஐதராபாதும் மோதுகின்றன.