வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Lenin
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (16:19 IST)

மன்னிப்புக் கோரியது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம்

இந்தியாவுக்கு எதிரான தொடரை ரத்து செய்ததற்கு மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் மன்னிப்புக் கோரியுள்ளது.
 
மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுடனான ஒப்பந்தத்தில், ஏற்கனவே இருந்த ஊதியத் தொகையிலிருந்து குறைக்கும் நடவடிக்கையில் அணி நிர்வாகம் இறங்கியது. இதனால் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு எதிரான முடிவை எடுத்ததாகக் கூறி வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்தியாவுடனான சுற்றுப்பயணத்தை நேற்றையப் போட்டியுடன் முடித்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் கொல்கத்தாவில் வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கடைசி ஒருநாள் போட்டி, ஒரு டி-20 கிரிக்கெட் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.
 
மேற்கிந்திய தீவு அணி வீரர்களின் சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக வரும் 21ஆம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
 
இதற்கிடையில், போட்டிகள் ரத்து செய்யப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், ரசிகர்களிடம் மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.