வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (16:25 IST)

’சென்னை அணியின் தடைக்கு தாவூத் இப்ராஹிம்தான் காரணம்’ - சுப்பிரமணிய சுவாமி

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டதற்கு தாவூத் இப்ராஹிம்தான் காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
 

 
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை பற்றி நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
 
இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்தரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி, உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
 
அந்த அறிக்கையில் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆராய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டது.
 
அந்த குழு, முத்கல் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடையும், குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து உத்தரவிட்டது.
 
இது குறித்து கடந்த ஜூலை மாதம், மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ”நீதிபதி லோதா குழுவின் முன்பு சென்னை அணிக்கு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்வேன்” என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், சுப்பிரமணிய சுவாமியும் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சீனிவாசனை சந்தித்தனர்.
 
பின்னர் செய்தியாளர்களிடத்தில் கூறிய சுப்பிரமணிய சுவாமி, “சென்னை அணியின் தடையை நீக்க கோர்ட்டில் வாதாடுவேன்.  சென்னை அணி புகார் பின்னனியில் தாவூத் இப்ராகிமின் சதி திட்டம் உள்ளது.
 
இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மீது எந்த தவறும் கிடையாது. சீனிவாசன் குறித்து கோர்ட்டில் பொய்யான தகவல் கூறப்பட்டுள்ளது.
 
சென்னை அணியை முடக்க சதி நடக்கிறது. இது தொடர்பான முகியமான தகவலை வருகிற 16ஆம் தேதி நான் வெளியிடுவேன் அதை நான் இப்போது கூற முடியாது” என்று கூறியுள்ளார்.