1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (11:17 IST)

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் செப்டம்பர், 17 ( இன்று ) இரவு 8 மணிக்கு மோதவுள்ளன.
 
ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பின்னர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவின் முன்னணி ஐ.பி.எல். அணிகளும் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த உள்ளூர் அணிகளும் போட்டிகளில் பங்கு பெறும். 
 
ஒட்டுமொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இன்றைய தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில், தங்கள் அணிகளின் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த காத்துக்கொண்டிருக்கின்றன.
 
தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக்கில் அடியெடுத்து வைப்பது இது 4 ஆவது முறையாகும். சென்னை அணியில் வெய்ன் சுமித், மெக்கல்லம், தோனி, பிராவோ, ரெய்னா, டுபிளிஸ்சி என பல அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். 
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரண்டு முறை ஐ.பி.எல் பட்டத்தை வென்றுள்ளதால், இம்முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல முனைப்புடன் செயல்படும். இவ்வணியில் கம்பீர், உத்தப்பா, யூசுப் பதான், சுனில் நரின் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். 
 
சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.36 கோடியாகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.15 கோடியும், இறுதிப்போட்டியில் தோற்கும் அணிக்கு ரூ.8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.