1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (13:16 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 

 
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை பற்றி நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
 
இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்தரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி, உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
 
அந்த அறிக்கையில் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆராய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டது.
 
அந்த குழு, முத்கல் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடையும், குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது
 
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்தபோது, சி.எஸ்.கே. மீதான தடையை நீக்க இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
 
மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மற்றும் இந்தியா சிமெண்ட் தரப்பு தனது தரப்பு வாதத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கு செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.