1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 18 டிசம்பர் 2014 (16:40 IST)

2 வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கப்பா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 2வது நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நேற்றைய ஆட்டத்தில் முரளி விஜயின்  அசத்தலான சதத்தின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஹேசல்வூட்டின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்று 97 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.4 ஓவரில் 408 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர், வாட்சன் மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்டோர்க்புல் 10 பவுண்டரிகள் உட்பட 55 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 88 பந்துகளில் 65 ரன்களுடன்  களத்தில் உள்ளார்.  மார்ஷ் 7 ரன்களுடன்  களத்தில் உள்ளார். போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இன்று சீக்கிரமாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.   ஆஸ்திரேலிய அணி 52 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இன்னும் இந்திய அணியைவிட முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் பின் தங்கியுள்ளது.
 
இந்திய அணி தரப்பில் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடும் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஷ்வின் 66 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.