1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 16 ஜனவரி 2015 (10:40 IST)

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் பிரெட் லீ ஓய்வு

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ அனைத்து தரப்பு  அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து உள்ளார்.
 

 
உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, 38. பிரட் லீ இதுவரை 76 டெஸ்ட் (310 விக்.,), 221 ஒருநாள் (380), 25 சர்வதேச ‘டுவென்டி–20’ (28) போட்டிகளில் விளையாடிய இவர், கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

பின், ஆஸ்திரேலியா (பிக் பாஷ்), இந்தியா (ஐ.பி.எல்.), நியூசிலாந்து (எச்.ஆர்.வி. கோப்பை) நாடுகளின் நடக்கும் உள்ளூர் ‘டி–20’ போட்டிகளில் விளையாடி வருகிறார்.
 
தற்போது இவர், அனைத்துவிதமான உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் ‘பிக் பாஷ்’ தொடரில் ‘சிட்னி சிக்சர்ஸ்’ அணிக்காக விளையாடும் இவர், இந்த சீசனுடன் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்தார். வரும் 22ஆம் தேதி சிட்னியில் நடக்கவுள்ள ‘சிட்னி தண்டர்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியில் ‘சிட்னி சிக்சர்ஸ்’ அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினால், தொடர்ந்து விளையாடுவார்.
 

 
ஒருவேளை அடுத்த சுற்றக்கான வாய்ப்பை இழந்தால், இப்போட்டி பிரெட் லீயின் கடைசி போட்டியாக அமையும். இதன்மூலம், கடந்த 2005ஆம் ஆண்டு ‘டி–20’ அரங்கில் அறிமுகமான இவரது 20 ஆண்டுகால பயணம் முடிவு பெற உள்ளது.
 
இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில், ‘‘இந்த சீசனுடன் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஓய்வு பெறவுள்ள தருணத்தை நினைத்துப் பார்க்கையில் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. இம்முடிவில் எனக்கு எவ்வித வருத்தம் கிடையாது. சரியான நேரத்தில் சிறந்த முடிவை எடுத்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,’’ என்றார்.