வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (15:58 IST)

மெக்கல்லம் அதிரடி; 64 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து சாதனை

டி- 20 போட்டியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் 64 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
 

 
பிர்மிங்ஹாம்மில் நடைபெற்ற நாட்வெஸ்ட் டி-20 போட்டியில் டெர்பிஷயர் ஃபால்கன்ஸ் அணி வார்விக்‌ஷைர் பியர்ஸ் அணியுடன் மோதியது.   இந்த போட்டியில் வார்விக்‌ஷைர் அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் அதிரடியாக விளையாடி 64 பந்துகளை [11 சிக்சர்களும் 13 பவுண்டரிகள்] 158 ரன்கள் குவித்தார்.
 
இதில் மெக்கல்லம் 42 பந்துகளில் சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மெக்கல்லம், 73 பந்துகளில் 158 ஓட்டங்களை குவித்துள்ளார். மேலும், இதுதான் டி-20 வரலாற்றில் தனி நபர் ரன் குவிப்பில் 2ஆவது அதிகப்பட்சமாகும். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் பெங்களூரு அணிக்காக 175 எடுத்ததே அதிகப்பட்சமாகும்.
 
20 ஓவர்களில் முடிவில் வார்விக்‌ஷைர் அணி 242 ரன்கள் குவித்தது.   தொடர்ந்து களமிறங்கிய டெர்பிஷயர் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், வார்விக்‌ஷைர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.