1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 14 ஜனவரி 2015 (11:56 IST)

பிராவோ, பொல்லார்ட் இருவருமே பழிவாங்கப்பட்டுள்ளனர் - கிறிஸ் கெய்ல்

டுவெய்ன் பிராவோ, பொல்லார்ட் இருவருமே வேண்டுமேன்றே தேர்வு குழுவினரால் பழிவாங்கப்பட்டுள்ளனர் என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 11ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் வெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
 

 
கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த இந்திய சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட ஊதியம் தொடர்பான பிரச்சனையால், வெய்ன் பிராவோ தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது.
 
இந்த பிரச்சினை காரணமாகவே பிராவோ, பொல்லார்ட் பழிவாங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து வெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோர் நீக்கப்பட்டு இருப்பதற்கு அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக கிறிஸ் கெய்ல் அளித்த பேட்டியில், ”சிறந்த ஆல்-ரவுண்டர்களான டுவெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோருக்கு அணியில் இடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும்.
 
இருவரும் வேண்டுமேன்றே தேர்வு குழுவினரால் பழிவாங்கப்பட்டு உள்ளனர். உண்மையை சொல்லப்போனால் இருவரும் அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். எங்களால் அவர்களுக்காக பேச முடியும். உணர்ச்சிகளை வெளிக்காட்ட இயலும்.
 
பிராவோ, பொல்லார்ட் இல்லாமல் எங்கள் அணி வலுவானதாக இருக்காது. முக்கியமான இரு வீரர்களும் இல்லாதது எங்கள் அணிக்கு பெருத்த பின்னடைவாகும். இருவரும் நீக்கத்துக்கான பின்னணியில் என்ன கதை இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.
 
ஆனால் இது ஒரு மோசமான தேர்வு என்று சொல்ல முடியும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி தொடர் வெற்றியை இருவருக்கும் அர்ப்பணிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.