1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 9 மே 2014 (13:50 IST)

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணியை சுலபமாக வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை புவனேஸ்குமாரின் அபாரமான பந்து வீச்சினால் சன்ரைசர்ஸ் சுலபமாக வீழ்த்தியது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுக்கிடையேயான இந்த ஆட்டம் அகமதாபாத்திலுள்ள சர்தார் படேல் மைதானத்தில் நடைபெற்றது.
 
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் தவானும், பிஞ்ச்சும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆட முற்பட்டனர். ஆட்டத்தின் 4வது ஓவரின் கடைசி பந்தில் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து தவான் அவுட்டானார். சிறுது நேரத்தில் பிஞ்ச்சும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ராகுல் 18 ரன்களும், ஓஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின் களமிறங்கிய வார்னரும், ஹென்ரிக்கசும் பேட்டிங்கில் சொதப்பி முறையே 6 மற்றும் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆல் ரவுண்டர் பதான் 21 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணியின் கடைசி வரிசை ஆட்டக்காரர்களான சர்மா, ஸ்டெய்ன், மிஷ்ரா ஆகியோரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
 
சிறிது நேர இடைவேளைக்கு பின் தனது இன்னிங்சை துவக்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே சொதப்பல்தான். அந்த அணியின் துவக்க வீரர்களாக ரகானேவும், நாயரும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் 3வது பந்தில் ரகானே டக் அவுட்டாகி வெளியேறினார். நாயர் தன் பங்குக்கு 12 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய அனைவருக்கும் இதே நிலைதான். 
 
அந்த அணியின் சாம்சன், வாட்சன், பின்னி, ஸ்மித் ஆகியோர் முறையே 16, 11, 12, 22 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கடை நிலை ஆட்டக்காரர்களான பாட்டியா, பால்க்னர், ரிச்சர்ட்சன் மற்றும் தம்பே ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். குல்கர்னி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.