1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (11:44 IST)

வெஸ்ட் இண்டீஸ் தொடர் ரத்தான விவகாரம்: ரூ.400 கோடி இழப்பீடு கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

சம்பள பிரச்சனைக்காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை பாதியில் ரத்து செய்ததால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ரூ.400 கோடி இழப்பீடு கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சம்பள பிரச்சனையில் தங்களது கோரிக்கையை ஏற்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மறுத்ததால் இதை எதிர்க்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்தனர்.
 
இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ரூ.400 கோடி வரை இழப்பீடு கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
இருப்பினும் இழப்பீடு தொகை எவ்வளவு என்பது ஐதராபாத்தில் நடக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
 
இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், தொடரை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் பாதியில் முறித்துக் கொண்டு திரும்பி விட்டது. இதனால் நாங்கள் அவர்களிடம் இருந்து நஷ்டஈடு கேட்பதற்கு முழுஉரிமை உண்டு. மேலும் இவ்விஷயத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.