வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:09 IST)

”கங்குலியை புறக்கணித்தது முட்டாள்தனம்” - ரவி சாஸ்திரிக்கு அசாருதீன் பதிலடி

இந்திய அணியின் சிறந்த கேப்டன் பட்டியலில் கங்குலியின் பெயரை சேர்க்காதது முட்டாள்தனமானது என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார்.


 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்த பந்தயத்தில் அதற்கு முன்னர் ஓரண்டு காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக பணி புரிந்த ரவி சாஸ்திரியும் இருந்தார்.

ஆனால், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ். லட்சுமணன் ஆகிய மூவரின் ஆலோசனையை ஏற்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருந்த ரவி சாஸ்திரி, ”லஷ்மண், சஞ்சய் ஜக்தாலே, சச்சின் ஆகியோர் என்னிடம் அருமையான கேள்விகளைக் கேட்டனர் என்றும் சவுரவ் கங்குலி எனது நேர்காணலின் போது இல்லை’’ கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த கங்குலி, ”தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படாததற்கு நான்தான் காரணம் என்று அவர் நினைத்தார் என்றால், அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றுதான் நான் கூற வேண்டியுள்ளது” என்று தெரிவித்து இருந்தார்.

இதனால், இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. மேலும், சமீபத்தில் தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

அப்போது பேசிய ரவி சாஸ்திரி, தோனி இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று கூறிவிட்டு, கபில்தேவ், பட்டோடி, அஜித்வடேகர் ஆகியோரது பெயரையும் குறிப்பிட்டார். ஆனால், மறந்தும் கங்குலியின் பெயரை உச்சரிக்கவில்லை.

மேலும், இந்திய விளையாட்டுத் துறையை பொறுத்தவரை ‘தாதா’ என்றால் அது கங்குலியை தான் குறிப்பிடும். ஆனால், கங்குலியை புறக்கணிக்கும் நோக்கில் ரவி சாஸ்திரி தோனியை ‘தாதா’ என்ற அடைமொழியுடன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன், “சிறந்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் இருந்து கங்குலியை புறக்கணித்தது முட்டாள் தனமானது.

புள்ளி விவரங்களை ரவி சாஸ்திரிக்கு பார்க்க முடியாதா? மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு விஷயம் கிடையாது. ஆனால், இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்களை, அவரது சொந்த விஷயங்களுக்காக அவமரியாதை செய்ய கூடாது” என்று கூறியுள்ளார்.