வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (17:36 IST)

கிரிக்கெட் கடவுள் சாதனையை முறையடிக்க காத்திருக்கும் ஸ்மித்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் மேலும் 20 புள்ளிகள் பெறும் பட்சத்தில் டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.


 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. மூன்றாவது போட்டியில் டிராவில் முடிவடைந்தது. 4ஆவது போட்டி தர்மசாலாவில் வருகின்ற 25ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதில்,  ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் சதம் [109 ரன்கள்] அடித்தார். அதன்பின் ராஞ்சியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் சதம் [178 ரன்கள்] விளாசினார்.

இதன்மூலம் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்மித், தற்போது 941 புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் ‘கிரிக்கெட் கடவுள்’ என்று கிரிக்கெட் விமர்சகர்களால் வர்ணிக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்றதே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகப் புள்ளிகள் பெற்ற சாதனையை படைத்திருந்தது.

அவருக்குப் பிறகு இங்கிலாந்தின் ஹட்டன் 945 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ஹோப்ஸ் 942 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பாண்டிங் 942 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

தற்போது ஸ்மித் 941 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவர் இன்னும் 20 புள்ளிகள் பெறும்பட்சத்தில் டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் சதம் அடித்தால் பிராட்மேன் சாதனையை முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.