வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2015 (17:15 IST)

அரையிறுதியில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்; 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

உலக்கோப்பை போட்டியின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
உலக்கோப்பை போட்டியின் மூன்றாவது காலிறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 

 
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சர்ஃப்ராஸ் அஹ்மது 10 ரன்களிலும், அஹ்மது ஷெசாத் 5 ரன்களிலும் வெளியேறினர்.
 
அடுத்து களமிறங்கிய ஹரிஸ் ஷோகைல் மற்றும் மிஸ்பா உல் ஹக் இருவரும் விக்கெட் வீழ்ச்சியை தடுப்பதற்காக நிதான ஆட்டத்தை கையாண்டனர். எதிர்பாராதவிதமாக மிஸ்பா உல் ஹக் 34 ரன்களில் வெளியேறினார். அரைச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹரிஸ் ஷோகைலும் 41 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
 
ஹரிஸ் ஷோகைல்
ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அணல் பறந்தது. குறிப்பாக ஜோஸ் ஹசில்வுட் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. உமர் அக்மல் 20, மக்சூத் 29, ஷாகித் அஃப்ரிடி 23, வகாப் ரியாஸ் 16 ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டும் எடுத்தது.
4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதுபெற்ற ஜோஸ் ஹாசில்வுட்
பாகிஸ்தான் அணி தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மிட்சல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், தொடக்க ஆட்டக்காரர் அரோன் பிஞ்ச் 2 ரன்னில் அவுட்டானார். அதேபோல, வார்னரும் 24 ரன்களிலும், கிளார்க் 8 ரன்களிலும் வெளியேற ஆஸ்திரேலியா 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டது.
 
ஆனால் அதன் பிறகு களமிறங்கிய ஸ்மித்தும், வாட்சனும் அணியை தூக்கி நிறுத்தினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தனர். பிறகு ஸ்மித் 69 பந்துகளில் [7 பவுண்டரிகள்] 65 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
ஷேன் வாட்சன்
கடைசியாக களமிறங்கிய மேக்ஸ்வெல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இடையில் வாட்சன், மேக்ஸ்வெல் ஆகியோர் கொடுத்த எளிதான கேட்சை பாகிஸ்தான் வீரர் ரஹத் அலி கோட்டைவிட்டார். இது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது.
 
கேட்சை கோட்டைவிட்ட ரஹத் அலி
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 33.5 ஓவர்களி 4 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்து எளிதான வெற்றி பெற்றது. வாட்சன் 66 பந்துகளில் [7பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 64 ரன்களும், மேக்ஸ்வெல் 29 பந்துகளில் [5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 44 ரன்களிலும் கடைசிவரை களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருது 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஸ் ஹசில்வுட்டுக்கு வழங்கப்பட்டது.
 
இதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. ஆஸ்திரேலியா அணி தனது அரையிறுதியில் இந்தியாவுடன் மோதவுள்ளது. பச்சை சட்டை அணிகளை வெற்றி கொண்ட இந்திய அணி பலமான மஞ்சள் அணியை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.