1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2016 (18:05 IST)

போராடும் இங்கிலாந்து, வெற்றியை நோக்கி இந்தியா: அஸ்வின், ஜடேஜா அசத்தல்!

போராடும் இங்கிலாந்து, வெற்றியை நோக்கி இந்தியா: அஸ்வின், ஜடேஜா அசத்தல்!

இந்தியாவுக்கு எதிராக மொகாலியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 78 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.


 
 
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. முதல் போட்டி சமனில் முடிய, இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மொகாலியில் தொடங்கியது.
 
இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை விட 12 ரன்கள் பின்தங்கி இருந்தது. இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
 
72 ரன் எடுத்த போது அஸ்வின் அவுட் ஆகி வெளியேற ஜெயந்த் யாதவ் ஜடேஜாவுடன் சேர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா 90 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெயந்த் யாதவ் 55 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 417 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ரஷித் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 134 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.