வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (19:52 IST)

ஆஷஸ் தொடர்: 100 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
 

 
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாம் மைதானத்தில் தொடங்கியது,.
 
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர் டேவிட் வார்னர் 2 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 7 ரன்களும் எடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினர். கடைசியாக நடைபெற்ற 16 முதல் இன்னிங்ஸ்களில் முதன்முறையாக ஸ்மித் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 
பின்னர் களமிறங்கிய, மைக்கேல் கிளார்க் 10 ரன்களும், வோக்ஸ் 16 ரன்களும், மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமலும், பீட்டர் நெவில் 2 ரன்களும், மிட்செல் ஜான்சன் 3 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணியின் பந்துவிச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
 
தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் மட்டும் நிலைத்து நின்று 50 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ரோஜர்ஸ் கடைசியாக நடைபெற்ற 11 இன்னிங்ஸ்களில் 9 முறை 50 ரன்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதில் ஒருமுறை 49 ரன்களில் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
 
அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். மற்றொரு வீரர் ஸ்டீவன் ஃபின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆண்டர்சன் 5  மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றுவது இது 18ஆவது முறையாகும்.