செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (13:00 IST)

தமிழக வீரர் அஷ்வினுக்கு அர்ஜூனா விருது - மத்திய அரசு அறிவிப்பு

விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்காக வழங்கப்படும் அர்ஜூனா விருது, கிரிக்கெட் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குத்துச் சண்டைப் பிரிவில் ஜெய் பகவானுக்கும் தடகளப் பிரிவில் டின்டு லுக்காவுக்கும் வில்வித்தைப் பிரிவில் அபிஷேக் வர்மாவுக்கும் கபடி பிரிவில் மம்தா பூஜாரிக்கும் ஸ்குவாஷ் பிரிவில் அனகா அலங்காமனி உள்பட 15 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
துரோணாச்சாரியா விருது, மனோகரன், லிங்கப்பா உள்பட ஐந்து பேருக்கும் தியான் சந்த் விருது சீஷன் அலி உள்பட மூன்று பேருக்கும் வழங்கப்படுகிறது.
 
புதுதில்லியில் ஆகஸ்டு 29ஆம் தேதி நடைபெற உள்ள  நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இவ்விருதுகளை வழங்க உள்ளார்.
 
அர்ஜுனா விருது பெறும் 46ஆவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமை, தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வினுக்கு கிடைத்துள்ளது. இவர், டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 100 விக்கெட் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளார். அவர் இதுவரை 20 டெஸ்ட், 79 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
 
அஷ்வின், டெஸ்ட் போட்டியின் ஆல்ரவுண்டர் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.