வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 22 மே 2016 (20:23 IST)

பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் செயலராக பொறுப்பு வகித்து வந்த அனுராக் தாக்கூர், அந்த வாரியத்தின் புதிய தலைவராக இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
 

 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சர்வதேச கிரிக்கெட் சபையின் சுயாதீன தலைவராக பொறுப்பேற்கு முன்பாகவே, கடந்த 10-ஆம் தேதியன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் பதவியை சஷாங் மனோகர் ராஜினாமா செய்திருந்தார்.
 
அதை தொடர்ந்து அனுராக் தாக்கூர் தான் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்கிற யூகங்கள் அப்போதே வெளிவரத் தொடங்கின.
 
இந்நிலையில், இன்று பிசிசிஐ-யின் மூத்த உறுப்பினரான துணைத் தலைவர் சி.கே.கண்ணா தலைமையில நடைபெற்ற சிறப்பு பொது கூட்டத்தின் போது, இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
ஹிமாச்சல் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் மகனும், அம்மாநிலத்தின் பாஜக மக்களவை உறுப்பினருமான அனுராக் தாக்கூர், 41 வயதிலேயே இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் மிக இளம் வயது தலைவராக ஏற்கனவே கடந்த 1963 ஆம் ஆண்டில், 33 வயதேயான ஃபதேசிங்ராவ் கேக்வாத் பொறுப்பு வகித்துள்ளார் என்பதால், அனுராக் தாக்கூர், இரண்டாவது இளம் வயது தலைவராகியுள்ளார்.
 
இதற்கிடையே, அனுராக் தாக்கூர் முன்பு வகித்து வந்த பிசிசிஐ செயலர் பதவிக்கு, அஜய் ஷிர்கே தேர்வாகியுள்ளார்.
 
பிசிசிஐ-யின் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்த அஜய் ஷிர்கே, கடந்த 2013ஆம் ஆண்டில் அப்போதைய பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த என்.ஸ்ரீனிவாசனின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்டு பதவி விலகியவர்.
 
மேலும், ஐபிஎல் சூதாட்டப் புகார் தொடர்புடைய விசாரணைக்காக அமைக்கப்பட்டிருந்த மூவர் குழுவில் அஜய் ஷிர்கே இடபெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.