வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (18:36 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கிரிக்கெட் அணியின் புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்தது. மேலும், பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் உள்ளிட்ட பிரிவுகளுக்கான பயிற்சியாளர் பதவிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 
முதல்கட்டமாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி, ரவிசாஸ்திரி, சந்தீப் பட்டேல், வெங்கடேச பிரசாத், அனில் கும்ப்ளே உள்ளிட்ட மொத்தம் 57 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
 
இதனையடுத்து பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ். லட்சுமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
 
விண்ணப்பித்த 57 பேரில் இருந்து 21 பேர் கொண்ட பட்டியல் தயாரானது. முதற்கட்டமாக இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே, லால்சந்த் ராஜ்புட், பிரவீண் ஆம்ரேவிடம் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்ற கங்குலி, லட்சுமண் நேரடியாக பல்வேறு கேள்விகள் கேட்டனர். லண்டனில் உள்ள சச்சின், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் கேள்விகள் கேட்டார்.
 
இந்நிலையில், இறுதியாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ். லட்சுமணன் ஆகிய மூவரின் ஆலோசனையை ஏற்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் ஓராண்டு இப்பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.