செவ்வாய், 19 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2016 (07:14 IST)

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் காவல்துறையிடம் வாக்குமூலம்

கிரிக்கெட் பந்தய மோசடியில் இலங்கை அணியின் வீரர்கள் ஈடுபட்டனர் என்னும் குற்றச்சாட்டு தொடர்பில், அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸிடம் வாக்குமூலம் பெறுவதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

நிதிமோசடிகள் குறித்து ஆராயும் காவல்துறையின் சிறப்புப் பிரிவினரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு ஏஞ்சலோ மேத்யூஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அணியின் வீரர்கள் ரங்கண ஹேரத் மற்றும் குஷால் ஜனித் பெரேரா ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் இதுவரை யார் மீதும் சந்தேகங்கள் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே குற்றச்சாட்டு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜெரி வவுடசின் வாக்குமூலமும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் கவலையடைந்துள்ளதாக ஏஞ்சலோ மேத்யூஸ் தனது டிவிட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் விஸ்வஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைப்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.