வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 20 டிசம்பர் 2014 (16:58 IST)

2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அணி படு தோல்வி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின்னர் இரு அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. 
இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 505 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது  2 ஆவது இன்னிங்சை தொடங்கிய போது 97 ரன்கள் பின்தங்கியிருந்தது. 3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. 
 
4 ஆவது நாளான இன்று இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் தவான் களம் இறங்கவில்லை. எனவே இந்திய அணியின் ஆட்டத்தை புஜாரா, கோலி இருவரும் தொடங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் சரிந்தது. கோலி 1 ரன்களிளும், ரகானே, ரோகித்சர்மா, தோனி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஏமாற்றினர். போராடி விளையாடிய புஜாரா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 
 
இறுதியில் இந்திய அணி 64.3 ஓவரில் 224 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் சொர்ப்ப இலக்கை நோக்கி ஆடிய
ஆஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. இதில் வார்னர் 6 ரன்களிலும், வாட்சன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ரோஜர்ஸ் அரை சதம் கடந்து 55 ரன்களில் வெளியேறினார். 
 
பின்னர் மார்ஷ் 17 ரன்களில் ஏமாற்றினார்.  ஹாடினையும் இந்திய வீரர்கள் 1 ரன்களில் வெளியேற்றினர். பின்னர் 24 ஆவது ஓவரில் மார்ஷ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.