வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்

முதல் டெஸ்ட் : இந்தியா திணறல்; வில்லியம்சன், லாதம் அபாரம்

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்துள்ளது.
 

 
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
 
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை அன்று கான்பூரில் தொடங்கியது. இது இந்திய அணி பங்கேற்கும் 500-வது டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விஜய் 65 ரன்கள், புஜாரா 62 ரன்கள் எடுத்தனர்.
 
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இரண்டாம் நாள் தொடங்கியவுடன் மேற்கொண்டு 27 ரன்கள் எடுத்து 318 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் மற்றும் வாங்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டது. தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினாலும், வில்லியம்சன், லாதம் இணை சிறப்பாக விளையாடியது.
 
இருவரும் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். அஸ்வின் பந்தில் டாம் லாதம் தனது 8-வது டெஸ்ட் அரைச் சதத்தை எடுக்க, ஜடேஜா பந்தில் கேன் வில்லியம்சன் தனது தனது 23-வது டெஸ்ட் அரைச் சதத்தை நிறைவு செய்தார்.
 
இருவரும் இணைந்து இதுவரை 2-வது விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்த்தனர். 34 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தேநீர் இடைவேளையின் போது கனமழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.
 
டாம் லாதம் 56 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமா அல்லது இந்திய அணி நியூசிலாந்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.