வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (22:28 IST)

கோபியின் தாயார் விடுதலை - உறவினர்

வவுனியா நெடுங்கேணியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், இந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.
 
கொழும்பு தெஹிவளையில் கைது செய்யப்பட்ட, பேக்கரி ஒன்றில் பணியாற்றியவர்கள் என சொல்லப்படுகின்ற 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
மூவரின் சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டன
 
அநுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் இன்று சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார்.
 
இந்த மூவரும் பதவியா பகுதிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் உயிரிழந்ததையடுத்து, இந்தச் சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
 
நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கும், இறுதிக்கிரியைகளில் அவர்கள் பங்குபற்றுவதற்கும், அவரவர் கலாசாரத்திற்கமைவாக கிரியைகளை மேற்கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
 
ஆயினும் காவல்துறையின் ஏற்பாடுகளுக்கமைவாக, இந்த இறுதிக்கிரியைகளில் இறந்தவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டார்களா என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
 
கோபி என்று படையினரால் குறிப்பிடப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் மாமனராகிய செகராசசிங்கம் பாலகுருபரன், கஜீபனின் சடலத்தைப் பார்வையிட்ட போதிலும், இறுதிக்கிரியைகளில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது மகளும், கஜீபனின் தாயாரும் கலந்து கொண்டார்களா இல்லையா என்பது பற்றிய தகவல் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.