1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (07:03 IST)

அணு ஆயுத வல்லமை பெற்ற நாடுகள் மீது மார்ஷல் தீவு வழக்கு

அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்கா , இந்தியா உட்பட 9 நாடுகள் , சர்வதேச சட்டத்தை மோசமாக மீறிவிட்டன என்று குற்றம் சாட்டி, பசிபிக் பிராந்தியத் தீவான மார்ஷல் தீவு வழக்குத் தொடுத்திருக்கிறது.

அந்த நாடுகள் 1968ம் ஆண்டில் அணுசக்தி பரவலுக்கெதிரான ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட ஆயுதக் களைவுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்துவதில் தோல்வி அடைந்திருக்கின்றன என்று அது குற்றம் சாட்டுகிறது.
 
இந்த அணு ஆயுத வல்லமை பெற்ற 9 நாடுகளுக்கு எதிராக, தெ ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதி மன்றத்தின் மூலம் வழக்கு தொடரப்படுகிறது.
 
அமெரிக்கா ஒரு அமெரிக்க நீதிமன்றத்தின் மூலமாகவும் வழக்கை எதிர்கொள்ளவிருக்கிறது.
 
அமெரிக்கா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மார்ஷல் தீவுகளில் ஏறக்குறைய 70 அணு குண்டுச் சோதனைகளை நடத்தியது. இதன் காரணமாக இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் அணுக் கதிரியக்க வீச்சுக்கு உள்ளானதுடன், அங்கு பாரிய சுற்றுச்சூழல் மாசடைவும் ஏற்பட்டது.
 
இந்த வழக்கில் அமெரிக்காவைத் தவிர அணுஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் மற்ற நாடுகளான ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.
 
இவை தவிர, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
 
இந்த வழக்கைத் தொடுத்திருக்கும் அணு ஆயுத கால அமைதி நிறுவனம் என்ற தன்னார்வ அமைப்பு இந்த வழக்குக்கும் நோபல் பரிசு பெற்ற ஆயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறது.
 
இந்த விஷயத்தில் இந்த நாடுகள் அளித்த உறுதிமொழியை அவை கடைப்பிடிக்கத் தவறியது, உலகை ஒரு ஆபத்தான இடமாக மாற்றுகிறது என்று டுட்டுவை மேற்கோள் காட்டும் வாசகம் ஒன்றும் அறிக்கை ஒன்றையும் இந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
 
இந்த வழக்கை விசாரிக்கத் தனக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை சர்வதேச நீதிமன்றம் முதலில் முடிவு செய்யவேண்டும்.