வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (21:17 IST)

உலககோப்பை 2019 - இந்தியா v தென் ஆப்ரிக்கா: செளதாம்ப்டன் மைதானம் அருகே இருந்தும் மேட்சை காண முடியாத இந்தியர்

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இன்று செளதாம்ப்டனில் மோதுகின்றன. இந்த அணிகள் முன்னரே லண்டன் வந்து, பலத்த பாதுக்காப்பிற்கு இடையே பயிற்சி மேற்கொள்கின்றன.
லண்டனிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செளதாம்டன் நகரம். இந்நகரம் பல வகையில் சிறப்பு வாய்ந்ததாகும்.  
 
அமைதி நகரம்
 
"லண்டன்போல அல்ல செளதாம்ப்டன். இங்கு வாழ்க்கை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். லண்டனிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்தேன். இங்கு நிலவும் அமைதியை கொண்டாடுகிறேன். நீங்கள் பார்ட்டி பிரியராக இருந்தால், உங்களுக்கான நகரம் அல்ல இது. இது வாழ்க்கைக்கான நகரம், கல்விக்கான நகரம் மற்றும் மகிழ்ச்சிகான நகரம்" என்கிறார் செளதாம்ப்டன் சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே உள்ள தெருவோர கடையில் பணிபுரியும் ஆண்ட்ரீயூ.
 
ஆம். அவர் சொல்வது சரிதான். பெரிதாக விடுதிகள் இல்லை, இரவு கொண்டாட்டத்திற்கான பப்புகளும் இல்லை. மாலை பொழுதில் சாலைகளும் வெறிச்சோடிதான் காணப்படுகின்றன. கோடையிலேயே இதுதான் நிலைமை என்றால், குளிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நீங்களே யோசனை செய்துக் கொள்ளுங்கள்.
 
ஹாம்ப்ஷெர் பவுல் மைதானத்தில்தான் இந்தியா, தென்னாப்பிரிக்கா போட்டி நடைபெறுகிறது. இந்த இடம் நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது.
 
"மக்கள் இந்த மைதானத்திற்காகதான் இவ்வளவு தொலைவு வருகின்றனர். மலைகள் சூழ்ந்த இந்த பகுதியில் முன்பு மக்கள் வசிக்கவில்லை. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது." என்கிறார் என்னை மைதானத்தின் அருகே இறக்கி விட்ட ஓட்டுநர்.
 
மாபெரும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. ஆனால், அது குறித்த எந்த தடையங்களும் இல்லை. இந்த மேட்ச் குறித்த சில பதாகைகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கடந்து இந்த மைதானத்திற்கென ஒரு வரலாறு உள்ளது.
 
ஹாம்ப்ஷெர் (அ ) ரோஸ் பவுலில் முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே இடையே நடந்தது. இதுவரை நடந்த 23 போட்டிகளில், 12 முறை முதலில் பேட்டிங் செய்தவர்களே வென்றிருக்கிறார்கள், ஒரு முறை வெற்றி தோல்வி இல்லாமல் ஆட்டம் முடிந்திருக்கிறது.
 
டாஸ் வெல்லும் அணி பொதுவாக பேட்டிங்கையே தேர்ந்தெடுக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
 
உலகக்கோப்பையின் முதல் போட்டியை தென்னாப்பிரிக்காவுடன் இந்த மைதானத்தில் ஆடும் இந்தியா, வெற்றி வாகை சூடவே விரும்பும். வெற்றியுடன் தங்கள் கணக்கை தொடங்க அவர்கள் விரும்புவார்கள். ஆனால், தரவுகள் வேறுவிதமாக உள்ளன.
 
2015ம் ஆண்டை தவிர உலகக் கோப்பையின் எந்த தொடரிலும் முதல் சில போட்டிகளில் இந்தியா சரியாக விளையாடியதில்லை. இந்தியா கோப்பையை வென்ற 2011 மேட்ச் ஆகட்டும், இறுதி வரை சென்ற 2003 மேட்ச் ஆகட்டும், இந்தியா உலக கோப்பையில் எப்போதும் சொதப்பலில்தான் தொடங்கி இருக்கிறது.
 
செளதாம்டனில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளன.
 
தென்னாப்பிரிக்கா இரண்டு முறை வென்றுள்ளது. இங்கிலாந்திடம் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஒரு முறை தோல்வியை தழுவி உள்ளது.
 
மறுபுறம் இந்தியா இரண்டு முறை இங்கிலாந்திடம் தோல்வியுற்றுள்ளது. கென்யாவை ஒரே ஒரு முறை வென்றுள்ளது.
 
கொஞ்சம் பேச்சு, நிறைய கிரிக்கெட்
 
"இந்த கணக்குகள் எல்லாம் ஒன்றுமில்லை. இந்தப் போட்டியில் இந்தியாதான் வெல்லப் போகிறது. ஹிட்மேன் (ரோஹித் சர்மா)தான் ஆட்ட நாயகன்." என்று ஆட்டத்தின் முடிவை முன்பே சொல்கிறார் பாலாஜி.
 
இந்த மேட்ச்சை காண்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து பயணமாகி வந்திருக்கிறார் இவர்.
 
அவர், "இந்தியா நிச்சயம் இறுதிப்போட்டிக்கு செல்லும். இந்திய அணியை உற்சாகப்படுத்த பலர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறோம்" என்கிறார்.
 
மேலும் அவர், "எனது ஓராண்டு சேமிப்பை இந்தப் போட்டியை காண செலவு செய்திருக்கிறேன். அது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இந்திய அணியை உற்சாகப்படுத்த வேண்டும்" என்று உத்வேகத்துடன் பேசுகிறார் பாலாஜி.
 
பாலாஜி தனியன் அல்ல. டெல்லியிலிருந்து சுனில் யாஷ் கல்ரா தன் நண்பர்களுடன் இந்த மேட்ச்சை காண பிரிட்டன் வந்திருக்கிறார்.
 
"இது எங்கள் முதல் போட்டி அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணி விளையாடும் அனைத்து உலகக்கோப்பை மேட்சுக்கும் செல்கிறோம். இந்தியா அணி விளையாடுவதை பார்ப்பது அல்லது அவர்களை உற்சாகப்படுத்துவது. இதை தாண்டி வேறென்ன வேண்டும்" என்கிறார் யாஷ்.
 
இந்திய அணியை உற்சாகப்படுத்த இந்த பூமி பந்தின் எந்த மூலைக்கும் செல்வேன். என் வாழ்க்கை மற்றும் என் சேமிப்பு அனைத்தும் கிரிக்கெட்டுக்காகதான் என்கிறார் அவர்.
 
ஜிதின்
 
ஆனால் எல்லாரும் அவரை போல அதிர்ஷ்டகாரர்கள் அல்ல, போட்டி நடக்கும் செளதாம்ப்டன் அருகே உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஜித்தினுக்கு, இந்த மேட்ச் டிக்கெட்டை வாங்குவதற்கு வசதி இல்லை.
 
அவர், "தினம் தினம் இந்த மைதானத்திற்கும், இந்திய அணி தங்கி இருக்கும் விடுதிக்கும் வருகிறேன். அனைத்தும் கோலியை பார்ப்பதற்காக. ஆனால், பாதுகாப்பு பலமாக உள்ளது. என்னை உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால், நிச்சயம் அவரை ஓவல் மைதானத்தில் பார்த்துவிடுவேன்" என்கிறார்.