ஆந்திரப்பிரதேசத்தில் யாருக்கு அதிக வெற்றிவாய்ப்பு?

bbc
Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (21:03 IST)
வரும் 11ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் ஒருசேர நடத்தப்படவுள்ள ஆந்திரபிரதேசத்தை பொறுத்தவரை ஆளும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முதல் முறையாக கூட்டணி ஏதுமின்றி தனித்து களமிறங்குகிறது. அதை எதிர்த்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையான சவால் அளித்து வருகிறது.
இவ்விரு கட்சிகளுமே தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்கான குழுக்களை வெகுகாலத்திற்கு முன்னதாகவே அமைத்திருத்தாலும், மற்ற கட்சிகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துவிட்டு, தங்களது தேர்தல் அறிக்கைகளை ஐந்து நிமிட இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக தேர்தலுக்கு ஐந்து நாட்களே இருந்த நிலையில் வெளியிட்டன.
 
ஆந்திரப்பிரதேசத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், ஒருபுறம் தற்போது ஆட்சியிலுள்ள சந்திரபாபு நாயுடு தனது அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள முயற்சித்து வரும் நிலையில், மற்றொரு புறம், ஜெகனின் தேர்தல் பரப்புரைகளை பார்க்கும்போது, அவர் தன்னைத்தானே முதலமைச்சராக பாவித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார் என்றே தெரிகிறது.
 
2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த அதே சூழ்நிலை தற்போது ஜெகனுக்கு இருப்பதை போன்று உள்ளது. அதாவது, ஜெகனுக்கு வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக இது கருதப்படுகிறது. ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசத்திலிருந்து, தெலங்கானா உருவான பிறகு அதிகாரபூர்வமாக நடக்கும் முதல் பொதுத்தேர்தல் இதுதான்.
 
2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு, பவன் கல்யாண் மற்றும் நரேந்திர மோதி ஆகியோர் ஒரே கூட்டணியில் இருந்தனர். அந்த தேர்தலை பொறுத்தவரை நரேந்திர மோதிக்கு இருந்த நற்பெயரையும், பவன் கல்யாணுக்கு இருந்த செல்வாக்கையும், தனது அனுபவத்தை முன்னிறுத்தியும் சந்திரபாபு வெற்றிபெற்றிருந்தார்.
 
 
அதுமட்டுமின்றி, புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தை அனுபவமுள்ள அரசியல்வாதி நல்ல நிலைக்கு அழைத்து செல்வார் என்பதன் அடிப்படையிலும் சந்திரபாபுவை மக்கள் தேர்ந்தெடுத்தனர் என்றும் கூறலாம். ஆனால், 2014ஆம் ஆண்டு இருந்த அந்த எண்ணவோட்டம் தற்போது தலைகீழாக மாறியுள்ளதாகவே கருதப்படுகிறது.
 
மாநில அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து வாதாடுவதை விட மாநிலத்தின் பிரதான கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகளே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. பாஜகவுடன் ரகசியமாக செயல்பட்டு வருவதாக கருதப்படும் ஜெகன், ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை தன்னுடைய முதன்மையான வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அதை வழங்குவதற்கு மறுத்த நரேந்திர மோதியை விமர்சிப்பதில் தயக்கம் காட்டுவதை மையப்படுத்தி சந்திரபாபு பரப்புரை செய்து வருகிறார்.
 
அதே சூழ்நிலையில், ஆந்திரப்பிரதேச அரசியலின் மற்றொரு முகமாக உருவெடுத்துள்ள பவன் கல்யாண், ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தையும், சந்திரபாபு நாயுடுவையும் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியை தாக்கி பேசி வருவது அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
 
ஜெகன் மோகன் ரெட்டி ஒடர்பு (ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி உயிரிழந்த அதிர்ச்சியில் மாநிலம் முழுவதும் உயிரிழந்ததாக கூறப்படுபவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் நடை பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட பெயர்) மற்றும் படயாத்ரா என்னும் பெயரில் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
 
 
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், சுமார் 18 மாதங்களுக்கு முன்பாகவே ஜெகன் தன்னுடைய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து, மக்களிடையே தனது செல்வாக்கை அதிகரிக்கும் பணிகளில் அவர் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். ஆனால், இதே போன்று 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது ஜெகனுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பு தேர்தலில் பிரதிபலிக்கவில்லை.
 
தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தற்போதைய அரசின் செயல்பாட்டை கணிப்பதற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியையும், தலைநகரை நிர்மாணிப்பதில் செலுத்தும் கவனத்தையும் எடுத்துக்கொண்டால், அந்த கட்சி 50 சதவீதம் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது போல தெரிகிறது.
 
தலைநகர வடிவமைப்பு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் சில இடங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தலைநகர கட்டுமானத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இன்னும் சந்திரபாபுவை விட்டு விலகவில்லை.
 
 
மேலும், திட்டமிடப்பட்ட புதிய குடிநீர், பாசன நீர் திட்டங்களுக்காக பணிகளை சரிவர மேற்கொள்ளாமலே, தேர்தலை முன்னிட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றை விஞ்சும் வகையில், மணல் கொள்ளை, அரசாங்க திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வாரியங்களின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் பாரபட்சம் போன்ற விவகாரங்கள் மாநிலம் முழுவதும் பூதாகரமாகி உள்ளது.
 
மத்தியில் பாஜகவுடன் ஆட்சியில் இருந்தும், ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்காதது மாநில அளவில் சந்திரபாபு மீது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி கொள்ளும் வகையில் ஜெகன் தான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் சந்திரபாபுவின் தோல்வியாக இந்த விவகாரத்தை குறிப்பிட்டு வருகிறார்.
 
இருப்பினும், இந்த விவகாரத்தை ஜெகன் மோகன் ரெட்டியை விட தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள சந்திரபாபு, ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்காததற்கு நரேந்திர மோதியே காரணம் என்றும், அதன் காரணமாகவே மத்திய அரசுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளதாகவும் கூறுகிறார். மேலும், பாஜகவுடன் சேர்ந்து இருந்த காலகட்டத்தில் நடந்த நேர்மறையான விவகாரங்களுக்கு தானே காரணம் என்றும், ஆனால் அதே சமயத்தில் எதிர்மறையான விடயங்களுக்கு மோதியே காரணம் என்றும் சந்திரபாபு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
 
சந்திரபாபு நாயுடுவை பொறுத்தவரை, அவர் ஒரு அரசியல்ரீதியிலான நிலைப்பாட்டை எடுத்தால், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். பிரதமர் நரேந்திர மோதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அறிவித்தபோது சந்திரபாபு அதை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்ட பிறகு அந்த விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொண்டுள்ளார். தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் மீண்டும் முதலமைச்சராவதற்கு வித்திட்டதாக கருதப்படும் மக்கள் நலத் திட்டங்களை தற்போது சந்திரபாபு முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார். ஒரு காலத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிரான கருத்துகளை கொண்டிருந்த சந்திரபாபுவின் நிலைப்பாடு மாறியுள்ளதை பலர் விமர்சித்து வருகிறார்கள்.
 
சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட மோதியை பல விதங்களில் புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு, தற்போது மோதியை கம்யூனிஸ்டுகளை விட மோசமாக விமர்சித்து வருகிறார்.
 
 
மாநிலத்தின் வறட்சி மிகுந்த பகுதிகளுக்கு தண்ணீர் வசதியை செய்து கொடுத்தது தங்களை தேர்தலில் வெற்றிபெற செய்யும் என்று தெலுங்கு தேசம் கட்சி நினைக்கிறது. அதேபோன்று, இதே திட்டங்கள் தங்களது பகுதிகளிலும் செயற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையின் பேரில் மக்கள் மீண்டும் தங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவார்கள் என்று சந்திரபாபு கருதுகிறார்.
 
ஒருகாலத்தில் தன்னுடன் ஒன்றாக பயணித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை தற்போது சந்திரபாபு கடுமையாக விமர்சித்து வருகிறார். ராவுக்கு ஆந்திராவில் எவ்வித பலமும் இல்லை. ஆனால், தன்னை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான பதிலடியை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் சந்திரகேர ராவ் தற்போது மிகுந்த அமைதி காத்து வருகிறார்.
 
ஏனெனில், சந்திரபாபுவுக்கு பதிலளிப்பது ஆந்திராவில் அவருக்கு கூடுதல் பலனை அளிக்கலாம் என்று அவர் கருதுகிறார். தேர்தலுக்கு பிறகு சந்திரசேகர ராவின் எதிர்வினைகளை எதிர்பார்க்கலாம்.
 
எல்லாவற்றிற்கும் மேலாக, சந்திரபாபு நாயுடு தேர்தலுக்காகவே மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெலுங்கு தேசம் கட்சி நினைக்கிறது.
 
பல்வேறு விவகாரங்களில் ஜெகன் மோகன் ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசியலில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் ஜெகன் அவற்றை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டாலும், இவற்றையெல்லாம் கடந்துதான் அவர் வர வேண்டும் .
 
இருப்பினும், ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக வாக்குரிமை பெற்றுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த சுமார் ஒரு கோடி பெண்களே இந்த தேர்தலில் வெற்றியாளரை நிர்ணயிக்கக் கூடியவர்களாக கருதப்படுகிறார்கள்.
 
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி தற்போது அதே காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக செயல்படும் நிலையில், ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்கும் எந்த கட்சியுடனும் கூட்டு சேர தயார் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறி வருகிறார்.
 
இந்த தேர்தலை பொறுத்தவரை, மாநிலத்தில் மூன்றாவது மிகப் பெரிய தலைவராக பவன் கல்யாண் உருவெடுத்துள்ளதாக கருதப்பட்டது. ஆனால், அவர் நேரடியாக இந்த தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்றும், இது அவருக்கு அரசியலில் முன்னோட்டத்தை காண்பதற்கான தேர்தலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
 
பவன் கல்யாண் சாதி அடிப்படையிலான ஆதரவிற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டாலும், ஆந்திரப்பிரதேசத்தை பொறுத்தவரை அரசியலில் சாதிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.
 
ஆந்திரப்பிரதேசத்தை பொறுத்தவரை, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுமே நேரடி போட்டியில் இல்லை. இவ்விரு கட்சிகளும் ஆந்திரப்பிரதேசத்தில் தனித்து நின்று வெற்றிபெறும் சூழ்நிலை இல்லை. அதாவது, ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே தற்போது ஆந்திரப்பிரதேசத்தில் மேலோங்கி வருகிறது.
 
ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தற்போதுள்ள செல்வாக்குடன் ஒப்பிட்டு பார்த்தால் அது முற்றிலும் தலைகீழாக உள்ளது.
 

இதில் மேலும் படிக்கவும் :