வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2014 (12:49 IST)

இணைய தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் புகார் குறித்து இந்தியா விசாரணை

பிளிப்கார்ட் என்கிற இணைய வணிக தளம் நடத்திய ‘பிக் பில்லியன் டே’ என்ற தள்ளுபடி விற்பனை தொடர்பில் அரசுக்கு புகார்கள் வந்துள்ளதாகவும், அது தொடர்பாக இந்திய அரசு ஆராயும் என்றும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


 
வர்த்தகர்களின் புகார்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின் மின்வணிக துறையின் நெறிமுறைகள் தொடர்பில் மேலதிக தெளிவு தேவைப்படுகிறதா என்பதையும் அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
‘பிக் பில்லியன் டே’ என்ற பெயரில் பல பொருட்களை இணையத்தில் மிகக்குறைந்த தள்ளுபடி விலையில் அக்டோபர் 6 ஆம் தேதி அன்று இணையத்தில் விற்பனை செய்வதாக இந்தியாவின் மிகப்பெரியஇணைய வணிக தளமான பிளிப்கார்ட் அறிவித்திருந்தது. அந்த விற்பனை எதிர்பார்த்த அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
 
பலரால் அவர்கள் நினைத்தபடி பொருட்களை வாங்க முடியவில்லை என்றும் அவர்கள் தள்ளுபடி விலையில் வாங்க விரும்பிய பொருட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டது என்ற தகவல் மட்டுமே அந்த நிறுவனத்தின் இணையத்தில் வந்ததாகவும் பலரும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
 
இத்தகைய இணையதள விற்பனைகள் பாரம்பரிய சில்லறைச் சந்தையில் உள்ள சிறிய மற்றும் பெரிய வர்த்தகர்களை பாதிக்கிறது என்கிற புகார்களும் எழுந்துள்ளன.
 
மேலும் பிளிப்கார்ட்டின் மாபெரும் விற்பனை என்பது வெறும் ஏமாற்று வேலை என்கிற குற்றச்சாட்டுக்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரவலாக பரவி வருகிறது.
 
இந்த பின்னணியில் இந்த விற்பனை தொடர்பிலும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் தொடர்பிலும் பிளிப்கார்ட் இணைய வணிக தளம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
 
விற்பனை தினம் வாடிக்கையாளர்களுக்கு அருமையான தினமாக இருக்க வேண்டும் என பிளிப்கார்ட் விரும்பியதாகவும் ஆனால் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் அத்தனை இனிமையாக இல்லை என்பதை அறிந்து அதற்கு வருந்துவதாகவும் பிளிப்கார்ட் அதன் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.
 
இந்த விற்பனை திட்டத்திற்காக பல மாதங்களாக திட்டமிட்டுவந்த நிலையிலும் அதற்காக தயாரான நிலையிலும் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றும் பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
 
இந்த விற்பனையால் தாங்கள் பெரும் ஏமாற்றமடைந்ததாக பல வாடிக்கையாளர்களும், இதன் மூலம் தங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக பாரம்பரிய சில்லறை வர்த்தகர்கள் கூறினாலும் உண்மையில் இது பிளிப்கார்ட் இணைய வணிக தளத்தின் அடையாளத்தை தான் பெருமளவு பாதித்துள்ளது என்று கூறுகிறார் பிபிசியின் ஆங்கில சேவையின் இந்திய வணிகத்துறை நிருபர் ஷில்பா கண்ணன்.