வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (21:13 IST)

தண்ணீர் பிரச்சனை: சிங்கப்பூர் நீரின்றி தவித்தபோது என்ன செய்தது தெரியுமா?

தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
குழாயடி சண்டைகளுக்கு பெயர்போன இடங்களில் தண்ணீர் பிரச்சனையின் வீரியம் மென்மேலும் அதிகரித்துள்ளதால், சாதாரண சண்டைகள் உயிரை பறிக்கும் தாக்குதல்களாக உருமாறியுள்ளன.
 
காய்ந்து போன அணைகளும், ஏரிகளும் வானத்தை நோக்கி காத்திருக்கின்றன. ஓரளவுக்கு கைகொடுத்து வந்த நிலத்தடி நீரும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது.
 
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று மாநில அரசு அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கும் வேளையில், மக்கள் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
 
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன? இதிலிருந்து மீண்டு வரவே முடியாதா? இயல்பு நிலைக்கு திரும்ப வேறென்ன வழிகள் இருக்கின்றன? உள்ளிட்ட தமிழக மக்களின் கேள்விகளுக்குரிய பதில்களை கை மேலே வைத்திருக்கும் சிங்கப்பூரின் தண்ணீர் மேலாண்மை திட்டத்தை அலசுகிறது இந்த கட்டுரை.
 
 
சிங்கப்பூருக்கு தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு
 
சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூரிலுள்ள 23 லட்சம் மக்கள் தொகையில் சுமார் ஐந்து லட்சம் பேர் தமிழர்கள்.
 
சிங்கப்பூரின் நான்கு ஆட்சி மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியில் செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் செயல்படுவதோடு பள்ளி முதல் கல்லூரி முதல் பயிற்று மொழியாகவும் உள்ளது.
 
இந்நிலையில், இயற்கையான நீர்நிலைகளும், நூற்றாண்டு பழமை வாய்ந்த பல்வேறு அணைகளையும், நிலத்தடி நீர் வளத்தையும் கொண்ட தமிழ்நாடு தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், சொல்லிக் கொள்ளும் படியான நன்னீர் ஆதாரமே இல்லாத சிங்கப்பூர் நாள்தோறும் வளர்ந்து தண்ணீர் தேவையை எப்படி பூர்த்தி செய்கிறது என்று பார்ப்போம்.
 
உலகுக்கே எடுத்துக்காட்டு
 
1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுப்பதற்கு முன்பும் சரி, பின்னும் சரி தனது ஒட்டுமொத்த தண்ணீர் தேவைக்கும் சிங்கப்பூர் மலேசியாவையே நம்பியிருந்தது.
 
ஆம், இயற்கையாக பெரியளவில் நன்னீர் ஆதாரமே இல்லாத சிங்கப்பூரின் முதல் நீர்த்தேக்கமே 1868ஆம் ஆண்டுதான் மெக்ரிச்சியில் கட்டப்பட்டது. இருப்பினும், தனது நன்னீர் தேவையை உள்ளூரிலேயே நிரப்ப முடியாததால், 1927ஆம் ஆண்டிலிருந்தே மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நீர் இறக்குமதி செய்யப்பட்டதாக மீடியா கார்ப் செய்தித்தளம் தெரிவிக்கிறது.
 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, உள்ளூர் நீர்த்தேக்கத்திலுள்ள தண்ணீரும், இறக்குமதி செய்யப்பட்ட தண்ணீரும் சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த நிலையில், தற்போது 'நான்கு தேசிய குழாய்கள்' எனும் திட்டத்தின் அடிப்படையில் கூடுதலாக இரண்டு திட்டங்கள் சேர்க்கப்பட்டு அந்நாட்டின் நீர் மேலாண்மை திட்டடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
1. உள்ளூர் நீர்த்தேக்கங்கள்:
 
சிங்கப்பூரின் மொத்த நிலப்பரப்பான 722.5 சதுர கிலோ மீட்டரில் மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பு நீர்ப்பிடிப்புக்கு உகந்ததாக உள்ளதாக அந்நாட்டு அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதாவது, சிங்கப்பூர் முழுவதுமுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழைநீரை தக்க முறையில் சேகரித்து வைப்பதற்கு அந்நாடு முழுவதும் 17 நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 
நாட்டின் பெரும்பகுதி நகர்ப்புற பகுதியாக இருந்தாலும், அங்குள்ள கட்டடங்கள், வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள் உள்ளடங்கிய விரிவான கட்டமைப்பின் மூலம் பெறப்படும் மழைநீர் நீர்த்தேக்கங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு பல்வேறு கட்ட சுத்திகரிப்புக்கு பின்னர் மக்களின் குடிநீர் தேவைக்கு வழங்கப்படுகிறது.
 
2. இறக்குமதி செய்யப்படும் தண்ணீர
 
சிங்கப்பூர் - மலேசிய இடையிலான 1962ஆம் ஆண்டு தண்ணீர் ஒப்பந்தத்தின்படி, மலேசியாவிலுள்ள ஜோகூர் ஆற்றிலிருந்து தினமும் 250 மில்லியன் கேலன் வரையிலான தண்ணீரை சிங்கப்பூர் பெற முடியும். 2061ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தம் முடிவடைவதற்குள், உள்நாட்டின் நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு சிங்கப்பூர் முயற்சித்து வருகிறது.
 
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வந்தாலும், அவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதாக கூறும் சிங்கப்பூர் அரசு, கீழ்க்காணும் இருவேறு தண்ணீர் திட்டங்களை நீண்டகால ஆராய்ச்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
 
3. புதுநீர்
 
பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்துவதேயே சிங்கப்பூரில் புதுநீர் என்று அழைக்கின்றனர். பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டத்திற்கான முயற்சி 1970களில் தொடங்கப்பட்டாலும், அதிக செலவீனத்தின் காரணமாக சுமார் இருபது ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
மீண்டும் 2000ஆவது ஆண்டு புத்துயிர் கொடுக்கப்பட்ட இத்திட்டம் சிங்கப்பூர் அரசின் பொதுப் பயனீட்டு கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு, பல சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.
 
2003ஆம் ஆண்டு முதல் கட்டமாக பெடோக் மற்றும் க்ராஞ்சி ஆகிய இரண்டு இடங்களில் மொத்தமாக ஒரு நாளைக்கு 10,000 கியூபிக் மீட்டர்கள் தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் ஐந்து புதுநீர் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
 
அதாவது, சிங்கப்பூரின் வீடுகள் முதல் பல்வேறு இடங்களில் பெறப்படும் பயன்படுத்தப்பட்ட நீரானது நேரடியாக புதுநீர் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, நுண் வடிகட்டல், சவ்வூடு பரவல், புற ஊதா கிருமிநாசம் ஆகிய உயர் தொழில்நுட்ப செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு தூய நீராக பெறப்படுகிறது.
 
இவ்வாறு பெறப்படும் நீர் 1,50,000க்கும் அதிகமான அறிவியல் சோதனைகளில் நற்சான்று பெற்று, அனைத்துலக குடிநீர் தரங்களை பூர்த்தி செய்துள்ளது. இவை பெரும்பாலும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே அளிக்கப்பட்டாலும், இதை குடிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிங்கப்பூரின் இன்றைய ஒட்டுமொத்த தண்ணீர் தேவையில் 40 சதவீதம் வரை நிறைவேற்றும் புதுநீரை, 2060ஆம் ஆண்டுக்குள் 55 சதவீதம் வரை நீடிப்பதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
 
4. சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர்
 
சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நான்கு திட்டங்களிலேயே கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம்தான் அதிக செலவுமிக்கதாக உள்ளதாக அந்நாட்டு அரசின் திட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை பெறுவதற்கு இயக்கப்பட வேண்டிய இயந்திரங்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்தவே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரின் தண்ணீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இதன் திறனை 2060ஆம் ஆண்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு அதே சதவீதத்தை தக்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமின்றி, தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேற்கூறிய நான்கு வழிமுறைகள் தவிர்த்து, தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டு வருகிறது.
 
அதுமட்டுமின்றி, சிங்கப்பூரிலுள்ள ஒவ்வொரு தனிநபரும் 2030ஆம் ஆண்டுக்குள் தினசரி 140 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
 
விழிப்புணர்வு
 
சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஏழு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டதாகவும், வரும் 2021ஆம் ஆண்டுக்குள் மேலும் நான்கு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாகவும் சிங்கப்பூர் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிங்கப்பூரில் தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை அந்நாட்டு அரசு பள்ளி முதல் கல்லூரி வரை பயிற்றுவிப்பதாக கூறுகிறார் சிங்கப்பூரை சேர்ந்த இளங்கலை கல்லூரி மாணவி அஷ்வினி செல்வராஜ்.
 
"சிங்கப்பூரில் ஒன்றாம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு தண்ணீரின் அவசியம் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. அதாவது, பள்ளியில் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து பாடம் எடுக்கப்படுகிறது என்றால் மாணவர்களை அருகிலுள்ள நீர்த்தேக்கம்/ சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றிற்கு அழைத்து சென்று நேரடி விளக்கம் அளிக்கப்படுகிறது.
 
சிறுவயதிலேயே தண்ணீரின் அவசியத்தை நமக்கு புரியும் மொழியில் கற்பிப்பதால் அது மனதில் ஆழப் பதிந்து, இயல்பு வாழ்க்கையில் செயற்படுத்துவதற்கு தூண்டுகிறது" என்று கூறுகிறார்.
 
சிங்கப்பூரில் இல்லாத வளத்தை ஏற்படுத்தி மக்கள் இயல்பாக வாழும்போது, அனைத்து வளமும் இருக்கும் தமிழ்நாட்டில் அதை பாதுகாக்காதது வருத்தமளிப்பதாக கூறுகிறார் அஷ்வினி.
 
"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமுமே சிங்கப்பூர்தான். எனது சிறுவயதில் காலியாக பார்த்த பல இடங்களில் இன்று நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நீர்நிலையை ஒட்டிய மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படுவதோடு, தொலைக்காட்சிகள், வானொலி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக காட்சியளித்த அணைகள் நீரின்றி வறண்டு காணப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
இதுமட்டுமின்றி, பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் தண்ணீர் ஆதாரத்திற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாக சிங்கப்பூர் அரசு கூறுகிறது. ஆனால், தண்ணீரின் அவசியம், மேலாண்மை போன்ற அடிப்படை விடயங்களிலேயே சறுக்கும் தமிழ்நாட்டை அதிதீவிர நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே மீட்டெடுக்க முடியும்.